Home » போர் நிறுத்தப் பேச்சு: ஹமாஸ் தலைவர் கெய்ரோவுக்கு விரைவு

போர் நிறுத்தப் பேச்சு: ஹமாஸ் தலைவர் கெய்ரோவுக்கு விரைவு

by sachintha
February 2, 2024 8:12 am 0 comment

காசாவில் உயிரிழப்பு 27,000ஐ தாண்டியது

முற்றுகையில் உள்ள காசா மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் காசாவில் முன்மொழியப்பட்ட போர் நிறுத்தம் தொடர்பில் பேசுவதற்காக ஹமாஸ் தலைவர் நேற்று (01) எகிப்து தலைநகர் கெய்ரோவை சென்றடைந்தார்.

இஸ்ரேலுடன் போரிட்டு வரும் ஹமாஸ் அமைப்பு முன்மொழியப்பட்டிருக்கும் ஆறு வார போர் நிறுத்த உடன்படிக்கையை மீளாய்வு செய்து வருகிறது. பாரிஸில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பிலேயே இந்தப் போர் நிறுத்த முன்மொழிவு தயாரிக்கப்பட்டது.

எனினும் நான்கு மாதங்களை நெருங்கும் இந்தப் போரில் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் எந்தத் தணிவும் இன்றி நீடிக்கிறது. தெற்கு நகரான கான் யூனிஸை மையப்படுத்தி அங்கு போர் உக்கிரமடைந்திருக்கும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 27,000ஐ தாண்டியுள்ளது.

இதன்படி காசாவில் குறைந்தது 27,019 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 66,139 பேர் காயமடைந்துள்ளனர் என்று பலஸ்தீன சுகாதார அமைப்பு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தெற்கின் பிரதான நகரான கான் யூனிஸில் கடந்த புதன் இரவிலும் இஸ்ரேலின் வான் தாக்குதல்கள் உக்கிரமாக நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. குறிப்பாக இரு மருத்துவமனைகளைச் சூழவே தாக்குதல்கள் இடம்பெற்றுவதாக உதவியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் கடந்த புதன்கிழமை தொடக்கம் இடம்பெற்ற தாக்குதல்களில் காசாவில் மேலும் 119 பேர் கொல்லப்பட்டதாக அந்தப் பகுதிக்கான சுகாதார அமைச்சு கூறியது.

இஸ்ரேலின் புதிய தாக்குதல்கள் குறிப்பாக காசா உள்துறை மற்றும் ஊடக அமைச்சு தலைமையகங்கள் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதல்களால் காசா நகர வானில் கரும்புகை எழுந்ததாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் விபரித்துள்ளனர்.

மத்திய காசாவில் அல் நுஸைரத் அகதி முகாம் கடும் தாக்குதலுக்கு இலக்கானதோடு தெற்கு காசாவில் மிகப் பெரியதும் தொடர்ந்து இயங்கி வருவதுமான கான் யூனிஸ் நகரில் இருக்கும் நாசர் மருத்துவமனையைச் சூழ டாங்கிகள் குண்டு மழை பொழிந்ததாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கான் யூனிஸ் நகரில் உள்ள அகதி முகாம் ஒன்றில் இருந்து இஸ்ரேலிய வாகனங்கள் வெளியேறியதை அடுத்து அந்தப் பகுதியில் இருந்து 14 சடலங்களை பொதுமக்கள் மற்றும் அம்பூலன்ஸ் பணியாளர்கள் மீட்டுள்ளனர். இவ்வாறு மீட்கப்பட்ட உடல்கள் நாசர் மருத்துவமனைக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்வதற்காக தயார்படுத்தப்பட்டிருப்பதாக அல் ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

“இங்கே இப்போது படுகொலை ஒன்று இடம்பெற்று வருகிறது” என்று பலஸ்தீன பகுதிக்கான எல்லைகளற்ற மருத்துவர்கள் அமைப்பின் தலைவர் லியொ கேன்ஸ் குறிப்பிட்டார்.

காசாவில் உள்ள மருத்துவமனைகளின் கீழ் சுரங்கப்பாதைகளை செயற்படுத்தி வருவதாகவும் மருத்துவ வசதிகளை கட்டளை மையங்களாக பயன்படுத்தி வருவதாகவும் ஹமாஸ் மீது இஸ்ரேல் குற்றம்சாட்டியபோதும் அதற்கான ஆதாரங்களை முன்வைக்க அதனால் இதுவரையில் முடியாமல் போயுள்ளது. ஹமாஸ் அமைப்பு இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறது.

மனிதாபிமான உதவிகள் தடைப்பட்டு வருவதன் காரணமாக மக்களிடையே பட்டினிச் சாவு ஏற்படும் சாத்தியம் பற்றி உலக சுகாதார அமைப்பின் அவசரப் பிரிவுக்கான பணிப்பாளர் மைக்கல் ரியான் புதனன்று (31) எச்சரித்திருந்தார்.

“காசாவின் பொதுமக்கள் இந்தப் போரின் பாங்குதாரர்கள் அல்ல என்பதோடு அவர்களும் அவர்களின் சுகாதார வசதிகளும் பாதுகாக்கப்பட வேண்டும்” என்று அவர் கூறினார்.

மூன்று கட்டத் திட்டம்

கட்டார் மற்றும் எகிப்து தலைமையிலான மத்தியஸ்த முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதோடு, ஹமாஸ் தலைவர் இஸ்மைல் ஹனியே நேற்று கெய்ரோவை சென்றடைந்தார். கடந்த வார இறுதியில் அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.சி. தலைவர் வில்லியம் பர்ன்ஸ் பாரிஸ் நகரில் நடத்திய பேச்சுவார்த்தை அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் போர் நிறுத்த முன்மொழிவு குறித்தே அவர் கெய்ரோவில் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

காசா பகுதியில் மேலும் உதவி விநியோகங்களுடன் ஆரம்பத்தில் ஆறு வார போர் நிறுத்தத்துடன் ஆரம்பிக்கும் மூன்று கட்டத் திட்டம் ஒன்று பற்றி ஆராயப்பட்டு வருவதாக ஹமாஸ் வட்டாரத்தை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் முதல் கட்டத்தில் காசா போராளிகள் தடுத்து வைத்திருக்கும் “பெண்கள், சிறுவர்கள் மற்றும் நோயுற்ற ஆண்கள் என 60க்கு மேற்பட்ட” பணயக்கைதிகள் மாத்திரம் விடுவிக்கப்படவுள்ளனர். இதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருக்கும் பலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படவிருப்பதாக மேற்படி வட்டாரம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பணயக்கைதிகள் பரிமாற்றத்துடன் தொடர்புபட்ட சாத்தியமான அடுத்த கட்டங்களில் இஸ்ரேலிய படைகள் வாபஸ் பெறுவது தொடர்பிலும் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் இஸ்ரேலிய தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் காசா பகுதியை கட்டியெழுப்புவதும் இந்தப் பேச்சுவார்த்தையில் இடம்பெற்றுள்ளது.

சுமார் 1,140 இஸ்ரேலியர் கொல்லப்பட்ட கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே இந்தப் போர் வெடித்தது. இதில் போராளிகளால் கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்து 132 பேர் காசாவில் பிடிக்கப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது. இதில் குறைந்தது 29 பேர் கொல்லப்பட்டிருப்பதாக நம்பப்படுகிறது.

இஸ்ரேல் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நடத்திவரும் தாக்குதல்களால் காசா பகுதியில் பாதிக்கும் அதிகமான கட்டுமானங்கள் தரைமட்டமாக்கப்பட்டு அல்லது சேதமாக்கப்பட்டு மனிதர்கள் வாழ முடியாத பகுதியாக மாறி உள்ளது.

உதவி விநியோகம்

எனினும் காசாவில் இருந்து துருப்புகளை வாபஸ் பெறுவதை நிராகரித்திருக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் அமைப்பை ஒழிப்பதாக மீண்டும் ஒருமுறை சூளுரைத்துள்ளார். அதேபோன்று உடன்படிக்கையின் ஓர் அங்கமாக ஆயிரக்கணக்கான பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கும் நெதன்யாகு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளின் உறவினர்கள் தொடர்ந்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருவதால் நெதன்யாகு அரசு கடும் அழுத்தத்தை எதிர்கொண்டு வருகிறது. முன்கூட்டியே தேர்தல் ஒன்றை நடத்துவதற்கான குரலும் இஸ்ரேலில் வலுத்து வருகிறது.

பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஊழியர்கள் சிலர் ஒக்டோபர் தாக்குதலுடன் தொடர்புபட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து பல நாடுகளும் உதவிகளை நிறுத்தியது காசாவில் மனிதாபிமான நெடிக்கடியை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.

இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியான அமெரிக்க உட்பட முக்கிய நன்கொடை நாடுகள் ஐ.நா நிறுவனத்திற்கான நிதியை நிறுத்தியுள்ளன.

இந்நிலையில் ஐக்கிய நாடுகள் குழுக் கூட்டத்தில் பேசிய அதன் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ், நன்கொடை நாடுகளை சந்தித்து அவைகளின் கவலைகளை கேட்டறிந்ததாகவும் நாம் எடுத்த நடவடிக்கைகள் பற்றி கோடிட்டுக் காட்டியதாகவும் கூறினார்.

இந்த நிதி நெருக்கடிக்குக் காரணமான இஸ்ரேலின் குற்றச்சாட்டு குறித்து சுயாதீன விசாரணைக்கு ஆதரவு வழங்குவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் பேச்சாளர் டமரா அல்ரிபாய் ஏ.எப்.பி. இற்கு குறிப்பிட்டுள்ளார்.

ஜெரூசலத்தில் ஐ.நா தூதுவர்களை சந்தித்த நெதன்யாகு, பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தில் ஹமாஸ் முழுமையாக ஊடுருவி விட்டதாகவும் மற்ற நிறுவனங்கள் மூலம் அது மாற்றப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இந்தப் போர் பரந்த அளவில் தாக்கத்தை செலுத்தி வரும் சூழலில், மத்திய கிழக்கில் இயங்கும் ஈரான் ஆதரவு போராட்டக் குழுக்கள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை இலக்கு வைத்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.

மறுபுறம் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் இஸ்ரேலிய படையினரின் சுற்றிவளைப்புகள் மற்றும் வான் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT