கணினி தொழில்நுட்பத்தில் தீங்கிழைக்கும் வைரஸ்கள்! | தினகரன்


கணினி தொழில்நுட்பத்தில் தீங்கிழைக்கும் வைரஸ்கள்!

உலகில் இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தாதவரே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நவீன தொழில்நுட்பமானது உலகில் உள்ள அனைவரையும் தன்வசப்படுத்தியுள்ளது. சிறியவர்,பெரியவர் என அனைவரும் தொழில்நுட்பத்தில் கைதேர்ந்தவர்களாக உள்ளனர்.

ஆனால் அவரவர் நன்மைக்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகையில், சிலவேளையில் ஒருவரின் நன்மையானது இன்னொருவருக்கு தீமையாகி விடுகின்றது.தொழில்நுட்பத்தின் பயன்பாட்டிலும் நன்மை, தீமை என இரு பக்கங்கள் உள்ளன. நன்மைகளை மட்டும் அனுபவிக்கத் தெரிந்த நாம் தீமைகளையும் கண்டறிந்து அதற்கான தீர்வுகளையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம் ஆகும். அந்தவகையில் கணினி குற்றங்களில் முக்கியமான ஒன்றான தீங்கிழைக்கும் மென்பொருள் அல்லது தீப்பொருள் என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஒரு கணினியின் செயற்பாட்டைக் கெடுத்தல், அதிலிருந்து முக்கியமான தரவுகளை சேகரித்தல் மற்றும் தனியார் கணினிகளை அனுமதியின்றி அணுகுதல் போன்றவற்றுக்காக ஹேக்கர்களால் உருவாக்கப்பட்ட ஒருவித மென்பொருள் இது ஆகும். இத்தீப்பொருளானது கணினி வைரஸ்கள், வேர்ம்கள்,இ ட்ரோஜன் ஹார்ஸ்கள்,ரூட்கிட்கள்,வேவு பொருள், ஏமாற்று விளம்பரப் பொருள், குற்றப் பொருள், பிற தீங்கு விளைவிக்கும் மற்றும் தேவையற்ற மென்பொருட்களை உள்ளடக்கும்.

 ஆரம்பத்தில் இளம் நிரலாக்குநர்கள் அவற்றை தம்மால் செய்ய முடியும் அல்லது அவற்றால் எவ்வளவு தூரத்திற்கு பரவ முடியும் என்பதை அறியும் நோக்கத்திற்காகவே இவற்றை உருவாக்கினர். ஆனால் காலம் செல்லச் செல்ல இவற்றின் பயன்பாட்டு நோக்கம் வேறு திசை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. 1999ம் ஆண்டின் பின்னர் இவற்றின் மறு உருவம் மெல்ல மெல்ல வெளிப்படத் தொடங்கியது.

பல வைரஸ்கள், மற்றும் விண்டோஸ் எக்ஸ்ப்ளோர்ஜிப் வார்ம் ஆகியவை வன் வட்டிலுள்ள கோப்புகளை அழிக்க அல்லது இல்லாத தரவை செலுத்தி கோப்பு முறையை சிதைக்க வடிவமைக்கப்பட்டன. ஒரு மென்பொருள் இயங்கும் போது, செயற்படக் கூடிய பிற மென்பொருள்களுக்குப் பரவி, அவற்றைப் பாதிக்கக் கூடியவாறு ஆக்கப்பட்டிருப்பின் அது 'கணினி வைரஸ்' என அழைக்கப்படும்.

இவை பேலோட்களை உள்ளடக்கி இருக்கும். ஒரு கணினியினுள் வைரஸானது பயனரின் செயற்பாட்டினாலேயே உள்நுழையும். வேர்ம்கள் என்பவை மற்ற கணினிகளைத் தாக்க வலைப்பின்னலினூடாக தன்னைத் தானே கடத்தும் ஒரு செயல் நிரலாகும்.

இதுவும் பேலோடைக் காவிச் செல்லும். வேர்ம்கள் தானாகவே பரவிக் கொள்ளும் ஆற்றலுடையவை.

ட்ரோஜன் ஹார்ஸ்கள் மேற்குறிப்பிட்டவற்றில் இருந்து சற்று வித்தியாசமானவை. இவை பார்க்கும் போது தீங்கற்ற அல்லது நன்மை பயக்கக் கூடியவாறான ஒரு மென்பொருளாகக் காணப்படும். பயனரால் அது பதிவிறக்கம் செய்யப்பட்ட பின்னர், தன்னுள் மறைத்து வைத்திருக்கும் பேலோட்டை இயங்கச் செய்யும். இது பயனரின் கோப்புகளை நீக்குதல் அல்லது தேவையற்ற மென்பொருள்களை நிறுவுதல் மற்றும் பரப்புதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடும். எனவேதான் இவை 'பரப்பிகள்' என அழைக்கப்படுகின்றன.

ஒரு கணினியில் தீங்கிழைக்கும் செயல்நிரல்கள் நிறுவப்படும் போது அவை கண்டறியப்பட முடியாத வகையில் மறைவிடங்களில் இருக்கும் போதே சுதந்திரமாக செயற்பட முடியும். அவ்வாறான மறைவிடங்களை அனுமதிக்கும் நுட்பங்களே 'ரூட்கிட்கள்' எனப்படும். இவை செயல்நிரல்கள் இருப்பதையோ அவற்றைப் பற்றிய கோப்புகளையோ காட்டாது. எனவே அவற்றைக் கண்டறிந்து இல்லாமல் செய்வது கடினமானதொன்றாகும்.

தீங்கு விளைவிக்கக் கூடிய மென்பொருட்கள் செயற்படுவது போல அவற்றை எதிர்க்கக் கூடிய மென்பொருள்களும் இருக்கின்றன.

தீச்சுவர் வலையமைப்பு, மற்றும் நச்சு நிரல் தடுப்பு போன்றவை இவ்வாறான சில மென்பொருள்களாகும். எது எப்படி இருப்பினும் சரியானதும் முறையானதுமான பயன்பாட்டின் மூலம் சிறப்பான பயனைப் பெற முடியும்.

கதிரவேல் சங்கீதா
(தொடர்பாடல் மற்றும் வணிக கற்கைகள் பீடம்,
திருகோணமலை வளாகம்,கிழக்குப் பல்கலைக்கழகம்)


Add new comment

Or log in with...