அமேசான் தீயை அணைப்பதற்கு இராணுவத்தை அனுப்ப உத்தரவு | தினகரன்


அமேசான் தீயை அணைப்பதற்கு இராணுவத்தை அனுப்ப உத்தரவு

பிரேசில் மீது சர்வதேச அழுத்தம்

பிரேசிலின் அமேசான் மழைக்காடுகளில் புதிதாக நூற்றுக்கணக்கான தீ சம்பவங்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில், பிராந்தியத்தின் ஒன்பது மாநிலங்களில் ஆறு மாநிலங்கள் தீயை கட்டுப்படுத்த இராணுவ உதவியை நாடியுள்ளன.

பாரா, ரொன்டோனியா, ரொரைமா, டொகன்டின்ஸ், அக்ரே மற்றும் மாடோ கிரொசோ ஆகிய மாநிலங்கள் இராணுவத்தின் உதவியை கேட்டிருப்பதாக சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ செல்லஸ் சனிக்கிழமை குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவங்கள் குறித்து இராணுவத்தை ஈடுபடுத்தப்போவதாக ஜனாதிபதி சயீர் பொல்சொனாரோ குறிப்பிட்டு ஒரு தினத்திலேயே இந்த அறிவிப்பு வெளியானது.

கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளுக்கு இடையே சுமார் 1,663 புதிய தீ சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக பிரேசிலின் விண்வெளி ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் மூலம் தெரியவருகிறது. இந்த தீ சம்பவங்களில் 1,200 க்கும் அதிகமானவை அமேசான் பிராந்தியத்தில் இடம்பெற்றுள்ளது.

பிரேசிலில் இந்த ஆண்டில் 78,383 காட்டுத் தீ சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதோடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 84 வீதம் அதிகரிப்பு என்று உத்தியோகபூர்வ தகவல்கள் குறிப்பிடுகின்றன. இதில் பாதிக்கும் அதிகமான காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் பிராந்தியத்தில் பதிவாகியுள்ளன.

பயிர் நித்திற்காக விவசாயிகள் காடுகளை அழிப்பதே இந்த தீ சம்பவங்கள் அதிகரிப்பதற்கு காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

உலகின் மிகப்பெரிய வெப்பமண்டல மழைக்காடாக உள்ள அமேசான் பெரும் அளவான கார்பன் டை ஒக்சைட்டை உறுச்சுவதால் காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்த வனப்பகுதியை பாதுகாப்பது பிரதானமானதாக உள்ளது. உலகின் 20 வீதமான ஒட்சிசனை இந்த வனப்பகுதியே வெளியிடுகிறது.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தீயை கட்டுப்பாடுத்துவதற்காக சுமார் 44,000 துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டோ அசவென்டோ குறிப்பிட்டுள்ளார். உதவி கோரிக்கை விடுத்த மாநிலங்களுக்கு இந்த துருப்புகள் அனுப்பப்படவிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன் முதல் நடவடிக்கையாக 700 துருப்புகள் ரொன்டோனியா மாநிலத்தின் தலைநகர் போர்ட் வெல்ஹோவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதன்போது தீயை அணைப்பதற்காக 12,000 லீற்றர்கள் நீரை பாய்ச்சக்கூடிய இரு சீ – 130 ஹேர்கியுலஸ் விமானங்களும் பயன்படுத்தப்படவிருப்பதாக பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இருளில் மூழ்கிய நகரங்கள்

பெரும் எண்ணிக்கையான இந்த காட்டுத் தீ சம்பவங்களால் கரும்புகை வானை மூடி இருப்பதோடு இது பல இடங்களையு இருள்மயமாக்கியுள்ளது.

அரை மில்லியன் மக்கள் வசிக்கும் போர்டோ வெல்ஹோ நகருக்கு மேலால் இந்த புகை மேகம் கலையாமல் இருந்து வருவதாக அங்கிருக்கும் குடியிருப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

சான் பெளலோவுக்கு கனமான மேகங்களை தாழ்வாக கொண்டு வந்த குளிர் காலநிலையோடு இந்த புகையும் கலந்துவிட்டது.

“மேல் நோக்கி செல்வதற்கு பதிலாக, வளிமண்டலத்தின் கீழேயே புகை சுமார் இரண்டு கிலோமீற்றர் உயரத்தில் தங்கிவிடுகிறது” என்று வானியல் ஆய்வாளர் மார்செலோ செலுட்டி தெரிவித்துள்ளார்.

பிரேசிலிய மாநிலங்களான ரொண்டோனியா மற்றும் ஏக்கரில் இருந்தும், பக்கத்திலுள்ள பொலிவியா மற்றும் பராகுவேயிலும் நிகழ்ந்த பெரிய தீ சம்பவங்களால் புகை தென் பகுதிக்கு செல்வதை செயற்கைக்கோள் படங்கள் காட்டுவதாக மற்றொரு வானிலை ஆய்வாளர் குறிப்பிட்டுள்ளார்.

அரசு மீது குற்றச்சாட்டு

அண்மைய புள்ளிவிபரங்களின்படி, 2018ஆம் ஆண்டு 7,500 சதுர கிலோமீற்றர் காட்டு பகுதி அழிக்கப்பட்டுள்ளது. இது 2017ஆம் ஆண்டு அழிக்கப்பட்டதைவிட 65 வீதம் அதிகமாகும்.

2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதி சயீர் பொல்சொனாரோ பதவியேற்ற பின்னர் அமேசானில் காடு அழிப்பு மூன்று மடங்காகியுள்ளது என்று புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

கடந்த மாதம் மட்டும் 2,200 சதுர கிலோமீற்றர் நிலத்தில் காடு அழிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருந்ததைவிட இது 280 வீதம் அதிகமாகும்.

இந்த புள்ளிவிபரத்திற்கு எதிராக ஜனாதிபதி பொல்சொனாரோ பொதுவெளியில் கேள்வி எழுப்பியதோடு, இதனை வெளியிட்ட நிறுவனத்தின் இயக்குநர் ரிக்கார்டோ கால்வாவ்வை கடந்த மாதம் பதவியில் இருந்து அகற்றியதால் மேலும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.

1988ஆம் ஆண்டு நாட்டின் அரசியல் சாசனத்தால் தற்போது தடை செய்யப்பட்டுள்ள பழங்குடியின இடஒதுக்கீடு உட்பட இந்த பிரதேசத்தின் மூலவளங்களை பயன்படுத்தி கொள்வது தொடர்பாக ஜனாதிபதி பொல்சொனாரோ வெளிப்படையாக பேசியுள்ளார்.

கடந்த ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், சுரங்க அகழ்வுக்கு உதவவும், விவசாய வர்த்தக நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை அமேசான் உள்பட சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரிவாக்கவும் சட்டமியற்றப்படும் என அவர் வாக்குறுதி அளித்துள்ளார்.

சர்வதேசம் அழுத்தம்

இந்த காட்டுத் தீ சம்பவங்கள் சர்வதேச அளவில் கோபத்தை தூண்டியுள்ளது. தெற்கு பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டிலும் இது பற்றி அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

காட்டுத் தீயை அணைக்க உடனடி நடவடிக்கை எடுக்கத் தவறினால், பிரேசில் மீது வர்த்தகத் தடைகளை விதிக்கப் போவதாக சில நாடுகள் மிரட்டியிருந்தன. பிரான்ஸும் அயர்லாந்தும் வர்த்தக உடன்படிக்கை ஒன்றை உறுதி செய்யப் போவதில்லை என்று கூறியிருந்தன.

ஆனால் காட்டுத் தீயைக் காரணம் காட்டி வர்த்தகத் தடை விதிக்க முயல்வது சரியல்லை என்று கூறி அதை பொல்சொனாரோ குறைகூறினார். இதற்கிடையே, வனப் பாதுகாப்புக் குழுக்கள், பிரேசிலிய நகரங்களிலும் உலக நாடுகளில் உள்ள பிரேசிலியத் தூதரகங்களுக்கு வெளியிலும் போராட்டம் நடத்த ஆரம்பித்துள்ளன.

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோனும் ஐ.நா பொதுச் செயலாளர் அண்டோனியோ குட்டரசும் அமேசான் காட்டுத் தீச்சம்பவங்கள் தொடர்பில் தங்களது கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், அமேசான் காட்டுத் தீயை அணைக்க பிரேசிலுக்கு அமெரிக்கா உதவத் தயாராக இருப்பதாக ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

ஆனால், அமேசான் காட்டுத் தீ விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிடத் தேவையில்லை என்று பிரேசில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பூமியின் நுரையீரல் என அழைக்கப்படும் அமேசான் காட்டின் சுமார் 60 வீதமான பகுதி பிரேசில் நாட்டில் உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர், பிரேசிலின் அமேசான் நிதியத்திற்கு வழங்கி வந்த நிதியை ஜெர்மனியும், நோர்வேயும் நிறுத்திவிட்டன. இந்த நிதி, காடு அழிப்பை தடுப்பதற்கு உதவும் சர்வதேச முயற்சியின் முக்கிய அம்சமாக இருந்துவந்தது.


Add new comment

Or log in with...