சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் லிவர்பூல் அணிக்கு 3ஆவது வெற்றி | தினகரன்


சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் லிவர்பூல் அணிக்கு 3ஆவது வெற்றி

முஹமது சலாஹ்வின் இரட்டை கோல் மூலம் இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரில் லிவர்பூல் அணி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பெற்றதோடு, கிரிஸ்டியானோ ரொனால்டோவின் கோல் மறுக்கப்பட்டபோதும் இத்தாலி சீரி ஏ தொடரை ஜுவாண்டஸ் அணி வெற்றியுடன் ஆரம்பித்தது.

மறுபுறம் ஸ்பெயின் லா லிகாவில் பலம்மிக்க ரியல் மெட்ரிட், வல்லடோலிட் கழகத்துடனான போட்டியை 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துக் கொண்டது.

கடந்த சனிக்கிழமை அன்பீல்டில் நடந்த போட்டியில் லிவர்பூல் அணி ஆர்சனலை எதிர்கொண்டது. ஜோல் மாடிஸ் தலையால் முட்டி பெற்ற கோல் மற்றும் சலாஹ்வின் பெனால்டி மூலமும் லிவர்புூல் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது.

இந்நிலையில் எதிரணி பக்கமாக பந்தை வேகமாக கடத்திச் சென்ற எகிப்தின் முன்கள வீரர் சலாஹ் பெனால்டி பகுதிக்குள் நுழைந்து அபாரமாக தனது இரண்டாவது கோலையும் 58 ஆவது நிமிடத்தில் வைத்து பெற்றார். இதன் மூலம் லிவர்பூல் அணி 3–0 என போட்டியில் முன்னிலை பெற முடிந்தது.

ஆர்சனலின் பதில் வீரர் லுௗகாஸ் டொரைரா கடைசி நேரத்தில் கோல் ஒன்றை போட்டபோதும் அது அந்த அணிக்கு ஆறுதல் கோலாகவே இருந்தது.

இதன் மூலம் இதுவரை நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றிருக்கும் லிவர்பூல் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்துகிறது.

இதனிடையே சீரி ஏ தொடரில் ஜுவாண்டஸ் தனது முதல் போட்டியில் பார்மா அணியை எதிர்கொண்டது. சனிக்கிழமை நடைபெற்ற இந்தப் போட்டியில் நடப்புச் சம்பியனான ஜுவாண்டஸ் அணியின் தலைவர் ஜோர்ஜியோ சிலினி 21 ஆவது நிமிடத்தில் புகுத்திய கோலே அந்த அணியின் வெற்றி கோலாக இருந்தது.

இதில் ஜுவாண்டஸ் நட்சத்திர வீரர் கிரிஸ்டியானோ ரொனால்டோ கோல் ஒன்றை புகுத்தியபோதும் அது ஓப் சைட் என வீடியோ நடுவர் மூலம் அறிவிக்கப்பட்டது.


Add new comment

Or log in with...