சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நியூசிலாந்து சிறப்பான துடுப்பாட்டம் | தினகரன்


சீரற்ற காலநிலைக்கு மத்தியில் நியூசிலாந்து சிறப்பான துடுப்பாட்டம்

பி.ஜே. வொட்லிங் மற்றும் கொலின் டி கிரான்ஹோம் இணைப்பாட்டத்தின் மூலம் இலங்கையுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நான்காவது நாள் ஆட்டத்தில் நியூசியாலாந்து அணி வலுவான முன்னிலையை பெற்றது.

கொழும்பு, பீ. சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியின் நான்காவது நாள் அட்டத்தின் பெரும்பாலான நேரமும் மழையால் தடைப்பட்டது. பகல்போசண இடைவேளைக்குப் பின்னர் ஆரம்பமான நான்காவது நாள் ஆட்டம் தேநீர் இடைவேளைக்கு பின்னரும் சற்று நேரம் தடைப்பட்டது.

இதனால் நான்காவது நாள் ஆட்டத்திலும் 48 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. இந்த டெஸ்ட் போட்டியின் முதலாவது மற்றும் இரண்டாவது நாள் அட்டங்களுக்கும் மழையால் இடையூறு ஏற்பட்டது.

இதில் தனஞ்சய டி சில்வாவின் சதத்தின் மூலம் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸுக்காக 244 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் 196 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்த நிலையில் நான்காவது நாளான நேற்று தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த நியூசிலாந்து அணிக்காக சதம்பெற்ற ஆரம்ப வீரர் டொம் லாதம் 154 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் ஆறாவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த வொட்லிங் மற்றும் கிரான்ஹோம் சிறப்பாக துடுப்பெடுத்தாடியது. இந்த ஜோடி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவு வரை களத்தில் இருந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டமாக 113 ஓட்டங்களை பகிர்ந்துகொண்டது.

வொட்லிங் 208 பந்துகளுக்கு முகம்கோடுத்து 4 பெளண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 81 ஓட்டங்களை பெற்றதோடு வேகமாக ஆடிய கிரான்ஹோம் 75 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 83 ஓட்டங்களை பெற்றார்.

இதன்மூலம் நான்காவது நாள் ஆட்ட நேர முடிவின்போது நியூசிலாந்து அணி 110 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 382 ஓட்டங்களை பெற்றுள்ளது. இதன்படி அந்த அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 138 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

எனினும் ஆட்டத்தில் மேலும் ஒருநாளே எஞ்சி இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் போட்டி சமநிலையில் முடிவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட போட்டியில் இலங்கை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...