அறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு | தினகரன்


அறுவக்காடு குப்பை லொறிகள் தாக்குதலை ஆராய புலனாய்வு பிரிவு

வனாத்தவில்லு, அறுவக்காடு கழிவுக் களஞ்சியத்திற்கு, குப்பை ஏற்றிச் செல்லும் லொறிகள் மீது கல்வீச்சு மேற்கொள்ளப்படும் சம்பவங்கள் குறித்தான விசாரணைக்கு, குற்றப் புலனாய்வு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குப்பைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு பாதுகாப்பு வழங்க இராணுவம் மற்றும் பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பொலிஸ் நடமாடும் சேவை மற்றும் மோட்டார் சைக்கிள் சேவை மூலம் இவ்வாறு பாதுகாப்பு வழங்கப்பட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

நேற்றைய தினம் (25) புத்தளம், தில்லையடி பிரதேசத்தில் குப்பைகளை ஏற்றிச் சென்ற லொறி மற்றும் அதற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸ் கெப் வாகனம் ஆகியவற்றின் மீது ஒரு சில நபர்கள் கல்வீச்சு மேற்கொண்டு, அதற்கு சேதம் விளைவித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து அவர்களில்  ஒரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

தில்லையடி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான நாலக்க பிரசன்ன என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுச் சொத்து தொடர்பான சட்டத்தின் கீழான குற்றங்களுக்கு அமைய அவரை புத்தளம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, எதிர்வரும் ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை அவருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...