கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் அம்பாறை மாவட்டம் சம்பியன் | தினகரன்


கிழக்கு மாகாண விளையாட்டு போட்டியில் அம்பாறை மாவட்டம் சம்பியன்

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்டம் ஒட்டு மொத்தமான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டதை பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு நேற்றுமுன்தினம் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

அம்பாறை மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.அமீர் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான ஏ.எம்.அப்துல் லத்தீப், வீ. ஜெகதீஸன் மற்றும் பிரதம கணக்காளர் எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்டம் கூடுதலான தங்கப்பதக்கங்களைப் பெற்று சம்பியனாகவும், மட்டக்களப்பு மாவட்டம் இரண்டாமிடத்தையும், திருகோணமலை மாவட்டம் மூன்றாமிடத்தையும் பெற்றுக் கொண்டது.

ஆண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியிலும், பெண்களுக்கான மெய்வல்லுனர் போட்டியிலும் அம்பாறை மாவட்டம் சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிகழ்வில் மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளர்கள், விளையாட்டு உத்தியோகத்தர்கள்,மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலய உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)


Add new comment

Or log in with...