பெண் வைத்தியரை கட்டியணைத்தவருக்கு விளக்கமறியல் | தினகரன்


பெண் வைத்தியரை கட்டியணைத்தவருக்கு விளக்கமறியல்

பெண் வைத்தியரை கட்டியணைத்தவருக்கு விளக்கமறியல்-Suspect Remand for Molesting Female Doctor

இடமாற்றத்திற்காக பொய் கூறுவதாக பிரதிவாதி தெரிவிப்பு

பெண் வைத்தியரை கட்டி அணைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் திருகோணமலை, கோமரங்கடவல பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று (23ம்)  திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 34 வயதான இரு பிள்ளைகளின் தந்தை என தெரியவருகின்றது.

குறித்த சந்தேகநபர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின்  புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட வந்தவர் எனவும், மலசலகூடத்தினை புனரமைப்பதற்காக அவ்விடங்களை காட்டிக்கொண்டிருந்த போது குறிப்பிட்ட பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆயினும் திருமணமாகாத தன்னால் தனிமையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்ற முடியாமல் இருப்பதாகவும், தனக்கு கொழும்பிற்கு இடமாற்றம் வழங்குமாறு குறித்த பெண் வைத்தியர் கோரியிருந்த நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பதாக தெரிவித்திருப்பது, பொய் குற்றச்சாட்டாக இருப்பதற்கு வாய்ப்புகள் இருக்கலாம் என, வைத்தியசாலை ஊழியர்கள் சந்தேகிக்கின்றனர்.

தனக்கு இடமாற்றம் பெற்று கொள்வதற்காக இச்சந்தர்பத்தினை பயன்படுத்தியிருக்கலாம் என, கைது செய்யப்பட்ட சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதவான் முன்னிலையில் சுட்டிக்காட்டினார்.

பொலிஸார் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையினால் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவன் உத்தரவிட்டுள்ளார்.

கோமரங்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் - அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...