கதைகளின் கூட்டு அவளும் ஒரு பாற்கடல் | தினகரன்


கதைகளின் கூட்டு அவளும் ஒரு பாற்கடல்

1992இல் வெளிவந்து பாடப் புத்தகங்களில் தனக்கான தனித்துவ இடத்தினை பல வருடங்களாக தன் வசப்படுத்தியிருந்த மக்கத்துச் சால்வை எனும் மனது மறக்காத சிறுகதையின் சொந்தக்காரரான எஸ்.எல்.எம். ஹனீபா இயற்கையுடன் சேர்ந்து இலக்கியத்தினை வடித்த சிற்பிகளில் முதன்மையானவர்.   

காலச்சுவடு பதிப்பகத்தினால் 2007இல் வெளியிடப்பட்ட எஸ்.எல்.எம். ஹனீபாவின் அவளும் ஒரு பாற்கடல் எனும் சிறுகதைத் தொகுதியானது மரபுகளின் வாசனைகளில் மிதந்து வாழ்ந்த அற்புதமான மனிதர்களையும், அவர்களின் மண் வாசம் கொண்ட வாழ்வினையும் பேசுகின்ற காத்திரமான படைப்பாகும்.

1992இல் வெளிவந்து பாடப் புத்தகங்களில் தனக்கான தனித்துவ இடத்தினை பல வருடங்களாக தன் வசப்படுத்தியிருந்த மக்கத்துச் சால்வை எனும் மனது மறக்காத சிறுகதையின் சொந்தக்காரரான எஸ்.எல்.எம். ஹனீபா இயற்கையுடன் சேர்ந்து இலக்கியத்தினை வடித்த சிற்பிகளில் முதன்மையானவர். 24சிறுகதைகள் அடங்கிய அவளும் ஒரு பாற்கடலினில் நீந்துகின்ற ஒவ்வொரு வாசகனும் அற்புதமான உலகம் ஒன்றினைக் கடந்த திருப்தியினைப் பெற்றுக் கொள்வான்.

இச் சிறுகதைத் தொகுதிக்கு முன்னுரை வழங்கிய பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஹனீபாவின் பெயரைக் கொண்டு அவரை ஒரு இனக்குழுமத்தின் தமிழ் எழுத்தாளராகவோ அன்றேல் தமிழ் பேசும் நாடொன்றின் இலக்கிய கர்த்தாவாகவோ வரையறுத்துவிடாது அவரை ஒட்டு மொத்த தமிழ்ச் சிறுகதைத் துறையின், புதுமைப்பித்தனுக்குப் பின்னர் வரும் பங்களிப்பாளர்களுளொருவராகக் கொள்ளல் வேண்டும்.

ஹனீபாவின் சிறுகதைகள் கைதேர்ந்த சிற்பியின் பிரதிமைகளாக, ஓவியனின் சித்தரிப்புக்களாக நவீன தமிழிலக்கியத்திற்கு நிச்சயமாக வளம் சேர்க்கின்றன என்கிறார். இதிலிருந்து இவரின் இத்தொகுதியானது நவீன இலக்கியத்திற்கு வலுச்சேர்க்கின்ற ஒன்றாக பார்க்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பானதே. மரபு மனிதர்களின் வாழ்வு பற்றிய ரம்மியமான கதைகளை இக்கால நவீன இளசுகள் புரிந்து கொள்வதற்கு அவளும் ஒரு பாற்கடல் ஒரு பாடமாக எமது கண்களுக்கு காட்சியளிப்பதினை நாம் வாசிப்பதின் ஊடாக புரிந்து கொள்ளலாம்...  

தமிழ்-முஸ்லிம் மக்களினுடைய உறவின் தத்ரூபம் பற்றியும், மொழியினைக் குடைந்து பேசும் அவர்களின் புன்னனை பற்றியும், அம்மனிதர்களின் போராட்டங்கள் பற்றியும் பதிவு செய்திருக்கும் இச் சிறுகதைத் தொகுதியானது புழுதிகளால் நிரம்பிய மானுடர்களின் வாழ்வினை மீட்டிப் பார்ப்பதற்குரிய அரியவகை சந்தர்ப்பத்தினை எமக்கு ஏற்படுத்தித் தருகிறது எனலாம்.

கோட்பாடுகளால் நிரப்பப்பட்ட மனித வாழ்வின் இயந்திரத் தன்மைக்கு அப்பால் நின்று மனதின் சுகந்தத்தினை தேடக்கூடிய மண் மணம் கொண்ட கதைகளின் நுகர்வினை அவளும் ஒரு பாற்கடலில் மிக நேர்த்தியாகப் புகுத்தியிருக்கின்ற எஸ்.எல்.எம். ஹனீபா வரலாற்றின் மரபுகளில் மறைந்து விட முடியாத மனிதராவார்...   


Add new comment

Or log in with...