"நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களிலில்லை" | தினகரன்


"நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களிலில்லை"

‘காற்றோடு போன கனவுகள்’ விமர்சன உரையில் கவிஞர் கு.கிலேசன்

நாவிதன்வெளி இளம் எழுத்தாளர் வை.கே.ராஜீ எழுதிய காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூல் வெளியீட்டுவிழா நாவிதன்வெளியில் கவிமணி கௌரிதாசன் தலைமையில் நடைபெற்றது.

நூல் அறிமுக உரையினை அபிவிருத்தி உத்தியோகத்தர் கோ.விஜயராஜாவும் நூல் விமர்சன உரையை கவிஞர் கு.கிலசனும் நூல் ஆய்வுரையினை கலைஞர் ஏ.ஓ.இ.அனல் ஆகியோரும் நிகழ்த்தினார்கள்.

நூல் விமர்சன உரை நிகழ்த்திய கவிஞர் கு.கிலேசன் தமதுரையில்:

சிறுகதை என்பது ஒரு சம்பவத்தையோ ஒரு கருத்தையோ தெளிவாக ஒருவர் சம்பந்தப்பட்டோ அல்லது ஒரு கூட்டத்துடன் தொடர்புபடுத்தியோ முழுமையாக் கூறுதலே அன்றி நாவலின் ஒரு பகுதியைத் தருதல் சிறுகதையல்ல.

காற்றோடு போன கனவுகள் ஒரு காதல் ஊற்றாக மலர்ந்திருக்கிறது.

விமர்சனம் என்பது நூலின் நிறைகளை மட்டும் சுட்டுவதல்ல நிறை குறைகளை ஆராய்ந்து தெளிவுபடுத்தி அடுத்த படைப்பை இன்னும் நிறைவாய் உருவாக்கத் துணை நிற்றலே.

அதே வேளை, தன் படைப்பின் குறை நிறைகளை ஏற்று திருத்தங்களை உள்வாங்குதலே ஒரு எழுத்தாளனுக்கான பண்பும்கூட.. காற்றோடு போன கனவுகள் சிறுகதை நூலின் தலைப்பே எதிர்பார்ப்புக்கள் ஏமாற்றமானதை உணர்த்துகிறதோ என எண்ணத் தோன்றுகிறது

அதற்கு அடுத்ததாக துணை வசனம் "நமக்கான பாதைகள் அடுத்தவர் பாதங்களில்லை" என தனித்துவத்தைக் காட்ட முயன்றிருப்பது எழுத்தாளரின் சிறந்த சிந்தனை எனலாம்.

சிறுகதைகளை உள்ளடக்கிய இத்தொகுப்பு 116பக்கங்களை கொண்டிருக்கிறது. இதில் முதல் சிறுகதை "ஆறாத காயங்கள்" பிரத்தியேக வகுப்பில் மலர்ந்த காதலை வர்ணித்து அழகாய் நகர்கையில் காதலி ஓர் வாய் பேசமுடியாத ஊமை என்பதும் பரம ஏழை என்பதும் அறிகையில் காதலனின் மனம் கலங்குகிறதோ இல்லையோ வாசகர் மனங்கள் சற்றுத் தடுமாறுகின்றன.

அதேவேளை உயிர்கள் உடமைகளென ஆறாத காயங்கள் தந்த சுனாமியின் நினைவுகளை மீளநினைக்க வைக்கும் சிறுகதையின் தொடர்ச்சி கண்களில் ஈரம் தரலாம், இறுதியில் காதலியின் உயிர் கடற்கோளில் கரைவதைச் சொல்லும் சொல்லாடல் கலங்க வைக்கிறது நம்முள்ளும் ஆறாத காயங்களை விதைக்கிறது.

சிறப்பான எளிய நடையை கையாண்டிருப்பதை வாழ்த்தியே ஆக வேண்டும். அடுத்து "இருட்டான இளமை" விடுதி வாழ்க்கையை யாவருக்கும் ஞாபகமூட்டிடும் அதேவேளை ஆணோ பெண்ணோ தான் சேர்கின்ற நண்பர்களின் நடத்தையால் தீயவழிகளிலும் செல்லலாம் எனும் கருத்தை முன்வைக்கிறார் நூலாசிரியர். பெண்கள் ஆணுக்கு சரிநிகராய் தாமும் செயற்பட எண்ணி மதுபோதையில் மூழ்கி தம்மையே இழப்பதையும் வாழ்வைத் தொலைப்பதையும் கருவைச் சுமத்தையும் உறவுகள் வெறுப்பதையும் வார்த்தைகளாய் அடுக்கியிருப்பது தற்கால உலகின் பிரதிபலிப்பென்றே சொல்லலாம். ஆயினும் தன் காத்திருப்புக்கு காரணமானவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதும் அவன் விபத்திலே இறந்துபோனதுவும் அறியும் போது அவளின் மனநிலையை விபரிக்க மறந்துவிட்டாரோ எழுத்தாளர் என எண்ணத் தோன்றுகிறது அதைத்தவிர சிறுகதை நகரும் பாணி சிறப்பானது மூன்றாவது "உயிரைத் தேடிய பயணம்" தற்கால நிதர்சத்தை படம் பிடித்துக் காட்டுகிறது. முகப்புத்தகத்தில் கவிதையை ரசிக்க ஆரம்பித்து கவிஞனின் கவிதையாகவே மாறிப்போன ஒரு காதல் கதையை சொல்கிறது.

காலங்கள் கடந்து தொடரும் காதலில் காதலன் நோய்வாய்ப்படுகையில் பாதி பிரிபவள் வெளிநாட்டு மாப்பிள்ளை கிடைத்ததும் நடுவீதியில் விட்டுச்செல்வதும் காதலன் சுகயீனம் ஓர்புறம் காதல்வலி ஓர்புறம் தாங்கித் தவிப்பதும் எழுத்தாளரின் வார்த்தைகளில் வடிந்த விதம் சிறப்பு பலபேரை சுயமதிப்பீடு செய்யத் தூண்டுமென நினைக்கிறேன் இச்சிறுகதை. நான்காவது சிறுகதை "ஏன் பிறந்தேன் ஏழைப் பெண்ணாக" வறுமையின் பிடியால் வயிறு நிரப்பிடப் பணிப்பெண்ணாய் கடல் தாண்டும் ஓர் பெண்ணின் கறுப்புப் பக்கங்களை கிறுக்கிய விதம் நிதர்சன வாழ்வின் வலிகளை கிளர்ந்தெழச் செய்கிறது.

மொத்தத்தில் இத்தொகுப்பின் அத்தனை சிறுகதைகளும் காதல் எனும் கருப்பொருளைக் கொண்டிருந்தாலும் சமூகக் கருத்துக்களையும் தற்கால நிதர்சன உண்மைகளையும் எடுத்துரைப்பதாகவும் உள்ளன. இது முதல் முயற்சி என்பதால் மனமுவந்து வாழ்த்தலாம்.

பாண்டிருப்பு தினகரன் நிருபர்


Add new comment

Or log in with...