அமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம் | தினகரன்


அமேசன் காட்டில் பயங்கர தீ; பல்லாயிரக்கணக்கான ஏக்கர் எரிந்து நாசம்

அமேசன் காட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால், பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய இயற்கை காடாக விளங்குவது அமேசன் மழைக் காடுகள். இந்த காடுகள் உலகின் வேறு எந்த பகுதிகளிலும் காணக் கிடைக்காத அரிய வகை மரங்கள், விலங்குகள், பறவைகள் என்று பல்வேறு உயிரினங்களின் வாழ்விடமாக உள்ளது. மேலும், அமேசன் காடுகளே பூமியின் நுரையீரல் எனவும் அழைக்கப்படுகின்றது.

அமேசன் காட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காட்டுத்தீ பரவியதோடு,  தீ காடு முழுவதும் பரவி வருகின்றது.

இதனால் பல்லாயிரக்கணக்காக ஏக்கர் நிலப்பரப்பிலுள்ள மரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் தீக்கிரையாகி வருகின்றன. இக்காட்டுத்தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  அமேசன் காடுகளில் தீப்பரவல்  அதிகரித்திருப்பது சர்வதேச நெருக்கடி என்பதோடு,  ஜி7 மாநாட்டில் இது முதல் முக்கிய பிரச்சினையாக பேசப்பட வேண்டும் எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோங் அரசியல் இலாபம் தேட முயல்கின்றார் என, பிரேசில் ஜனாதிபதி ஜெயிர் போல்சீனரோ தெரிவித்துள்ளார்.

ஜி7 மாநாட்டில் பிரேசில் அங்கம் வகிக்காத நிலையில், இதைப் பற்றி விவாதிப்பது தவறான காலனித்துவ மனப்பான்மையை வெளிப்படுத்துவதாகவும், பிரேசில் ஜனாதிபதி கூறியுள்ளார்.

பிரேசில் முழுவதும், குறிப்பாக அமேசன் பகுதிகளில், காட்டுத்தீ பரவுவது 85 சதவீதம் அதிகரித்துள்ளதாக தேசிய விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியிட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

 


Add new comment

Or log in with...