மிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை | தினகரன்


மிஹ்ரானின் அபார கோல்களினால் பூட்டானை வீழ்த்தியது இலங்கை

பதினைந்து வயதுக்குட்பட்டோருக்கான 6ஆவது தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளன சம்பியன்ஷிப் போட்டித் தொடரின் முதல் போட்டியில் இலங்கை வீரர்கள் 3--2 என்ற கோல்கள் கணக்கில் பூட்டான் அணியை வீழ்த்தியுள்ளனர்.

இந்தியாவின் கொல்கத்தா கல்யாணி அரங்கில் ஆரம்பமாகிய இந்தப் போட்டியின் முதல் 10 நிமிடங்களுக்குள்ளேயே பூட்டான் வீரர்கள் முதல் கோலைப் போட்டனர். மத்திய களத்தில் இருந்து பெற்ற பந்தை டென்சின் இலங்கை கோல் காப்பாளர் தரூசவைத் தாண்டி கோலுக்குள் செலுத்தி போட்டியின் முதல் கோலைப் பெற்றுக்கொண்டனர்.

அடுத்த சில நிமிடங்களில் இலங்கை வீரர்களுக்கு எதிரணியின் கோல் எல்லையில் கிடைத்த பந்தை வலது பக்க கம்பத்திற்கு வெளியால் அடித்தனர்.

போட்டியின் 30 நிமிடங்கள் கடந்த நிலையில் எதிரணியின் கோல் எல்லையில் Indirect free kick கிடைத்த போதும் இலங்கை வீரர்கள் கோலுக்குள் பந்தை செலுத்த தவறினர். அவ்விடத்தில் மீண்டும் கோல் காப்பாளர் தனது இடத்தை விட்டு வெளியே வந்த நிலையிலும் இலங்கை வீரர்கள் கோலுக்கான வாய்ப்பை தவறவிட்டனர்.

தொடர்ந்து பூட்டான் வீரர்கள் கோலுக்கு மேற்கொண்ட அடுத்தடுத்த முயற்சிகளை இலங்கை கோல்காப்பாளர் தரூச ரஷ்மிக்க சிறந்த முறையில் தடுத்தார்.

முதல் பாதியின் இறுதித் தருவாயில் இலங்கை வீரர்களுக்கு எதிரணியின் மத்திய களத்தில் ப்ரீ கிக் வாய்ப்பொன்று கிடைத்தது. இதன்போது கோல் நோக்கி செலுத்திய பந்தை பூட்டான் கோல்காப்பாளர் தடுத்தார்.

இரண்டாம் பாதி ஆரம்பமாகியவுடனேயே பூட்டான் வீரர்கள் தமக்கான இரண்டாவது கோலையும் பெற்றுக்கொண்டனர். முதல்முறை கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை கோல் காப்பாளர் தரூச வெளியே தட்டிவிட்டார்.

இதன்போது, மீண்டும் கிடைத்த கோணர் உதையின்போது வந்த பந்தை ஷோசாங் கோலாக்கினார். அடுத்த 10 நிமிடங்களுக்குள் இலங்கை வீரர்கள் தமக்கான முதல் கோலைப் பெற்றனர். எதிரணியின் கோல் எல்லைக்கு சற்று வெளியில் கிடைத்த ப்ரீ கிக்கின்போது, தேஷான் துஷ்மிக்க தடுப்பு வீரர்களுக்கு மேலால் பந்தை நேரே கோலுக்குள் செலுத்தினார்.

அதன் பின்னர் இரு அணிகளும் தொடர்ந்து தமக்கான வாய்ப்புக்களுக்கான முயற்சித்து வந்தன.

இந்நிலையில் 73ஆவது நிமிடத்தில் கம்பளை ஸாஹிரா கல்லூரி வீரர் மொஹமட் மிஹ்ரான், ஒரு திசையில் இருந்து பெற்ற பந்தை கோல் நோக்கி அடித்தார்.

இதன்போது பூட்டான் கோல் காப்பாளர் பந்தைத் தடுக்கும்போது மீண்டும் விரைந்து சென்ற மிஹ்ரான் அதனை கோலுக்குள் செலுத்தி போட்டியை சமப்படுத்தினார். அதன் பின்னர் போட்டியின் இறுதி நிமிடங்களில் இரு அணி வீரர்களும் தமது வேகத்தை அதிகரித்து விளையாடினர். ஆட்டத்தின் 92ஆவது நிமிடத்தில் இலங்கை வீரர்களுக்கு கிடைத்த கோணர் உதையின்போது உள்வந்த பந்தை மிஹ்ரான் தலையால் முட்டி கோலுக்குள் செலுத்தி தனது இரண்டாவது கோலையும், அணிக்கான மூன்றாவது கோலையும் பதிவு செய்தார். இரண்டாவது பாதியில் காண்பித்த அபார ஆட்டத்தினால் இலங்கை 15 வயதின்கீழ் அணியினர் 3-2 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று 15 வயதின் கீழ் சாப் சம்பியன்ஷிப் போட்டியை வெற்றியுடன் ஆரம்பித்தனர். இலங்கை அணி இன்று 23ஆம் திகதி நேபாளம் அணியை எதிர்கொள்கிறது.


Add new comment

Or log in with...