கொழும்பு நகரை உலகின் எழில்மிகு நகராகக் கட்டியெழுப்பும் திட்டம் | தினகரன்


கொழும்பு நகரை உலகின் எழில்மிகு நகராகக் கட்டியெழுப்பும் திட்டம்

ஐந்து ஆண்டுகளில் பூரண வெற்றியளிக்கும் - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

50, 60 வருடங்களுக்கு மேல் எந்தவொரு முறையான திட்டமும் இல்லாமல் கட்டியெழுப்பப்பட்டுள்ள கொழும்பு நகரை சிங்கப்பூர் போன்று உலகில் எழில் மிகுந்த நகரமாக கட்டியெழுப்பி வருவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.  

கொழும்பை தெற்காசியாவின் சிறந்த நகரமாக கட்டியெழுப்புவதாகவும் அதேபோன்று இந்து சமுத்திரத்தின் மாபெரும் நகரமாக கொழும்பை கட்டியெழுப்புவது தமது திட்டம் என்றும் பிரதமர் தெரிவித்தார். அடுத்து வரும் ஐந்து ஆண்டுகளில் கொழும்பு நகரை பாரிய எழில்மிகு நகரமாகவும் சகல வசதிகளையும் கொண்ட நகரமாகவும் கட்டியெழுப்பும் நோக்கில் தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகளுடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமெனவும் பிரதமர் தெரிவித்தார்.  

கொழும்பு கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸ் வரைக்குமான பயணிகள் படகுச் சேவையை நேற்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.  

இங்கு முதலாவது படகுச் சேவை ஆரம்பித்த பிரதமர், படகுப் பயணத்திலும் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும். கொழும்பு நகரில் நிலவும் பாரிய வாகன நெருக்கடியை நிவர்த்திக்கும் வகையில் யூனியன் பிளேஸிலிருந்து கொழும்பு கோட்டை வரைக்குமான பேரை வாவியூடான பயணிகள் படகுச் சேவை அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலின் கீழ் செயற்படுத்தப் பட்டுள்ளது.  

கொழும்பு கோட்டையிலிருந்து யூனியன் பிளேஸுக்கு பஸ் பிரயாணம் மூலம் 30நிமிடத்தை செலவிடும் பயணிகள் இன்றுமுதல் இந்தப் படகுச் சேவை மூலம் 9அல்லது 10நிமிடங்களில் இந்தப் பயணத்தை நிறைவுசெய்ய முடியும்.  

இதற்கிணங்க இந்த படகு சேவை ஆரம்பிக்கப் பட்டதன் முதல் மாதத்தில் பயணிகள் இலவசமாக பயணிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுக்கப் பட்டுள்ளன. இலங்கை கடற்படை மற்றும் கடல் போக்குவரத்து சேவை பிரிவு இணைந்து நடத்தும் இப்படகுச் சேவையில் கப்பல் பிரயாணத்தில் மேற்கொள்ளப் படும் சகல பாதுகாப்பு விதிமுறைகளும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றார்.

லோரன்ஸ் செல்வநாயகம்


Add new comment

Or log in with...