கொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம் | தினகரன்

கொழும்பில் பேர வாவி படகுச் சேவை ஆரம்பம்

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முதற்கட்டமாக யூனியன் பிளேஸிலிருந்து கொழும்பு கோட்டை வரை பேர (Beira Lake) வாவி படகுச் சேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இன்று (22) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் அந்த அமைச்சின் கீழ் இயங்கும் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த படகுச்சேவையை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு நகரில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாகன நெரிசல்களுக்கு தீர்வு காணும் வகையில் நகர் புறங்களிலுள்ள வாவிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து படகுச் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான முதற் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தற்போது கொழும்பு கோட்டையிலிருந்து யூனியன் பிளேசுக்கு பஸ் மூலம் செல்வதற்கு 30நிமிடங்கள் எடுக்கும் அதேவேளை பிரயாணிகள் படகு சேவை மூலம் 9அல்லது 10நிமிடங்களில் அப் பயணத்தை நிறைவு செய்ய முடியும்.

இந்த பேர வாவி படகுச் சேவை அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரனவக்க, சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, கடற்படை தளபதி அத்மிரால் பியல் டி சில்வா உள்ளடங்கலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டார்கள்.

இலங்கை காணி அபிவிருத்தி திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் இச்சேவையானது முதல் மாதம் இலவசமாகவே மக்களிற்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...