பிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம் | தினகரன்


பிற சமூகத்தினரை அரவணைக்கும் மார்க்கம் இஸ்லாம்

இஸ்லாம்  மார்க்கம்  முற்று முழுதாக சம்பூரணப்படுத்தப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டமாகும்.  புனித  அல்குர்ஆனானது மனிதனை இன்ப ரீதியிலாக சிந்திப்பதை முற்று முழுதாக தடுத்துள்ளது. அதனை பின்வரும் அல்குர்ஆன் வசனம் மிக அழகாக  எடுத்துரைக்கின்றது :- 

“மக்களே உங்களை நாம் ஒரே ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் புரிந்து வாழ கோத்திரங்களாகவும் கிளைகளாகவும் பிரித்தோம்.            (ஆல்குர்ஆன் : அல் – ஹுஜ்ராத் : 13) 

மனிதன் பேசும் மொழிகளும் அல்லாஹ்வினால் உருவாக்கப்பட்டதே. “உங்கள் மொழிகள் மாறுபட்டிருப்பது இறை அத்தாட்சிகளில் ஒன்றாகும்.”                                                   (அல்குர்ஆன் – அர்ரூம் : 22) 

“உம் இறைவன் எண்ணியிருந்தால் மனிதர்கள் அனைவரையும் ஒரே சமூகத்தினராக ஆக்கியிருப்பான் (அவ்வாறு நாடவில்லை) அவர்கள் தங்களுக்குள் மாறுபட்டுக்கொண்டே இருப்பார்கள்.(அல்குர்ஆன் – ஹுத் : 18)

மேற்படி திருக்குர்ஆன் வசனத்தின் அர்த்தம் என்னவெனில் பிரிவினைவாதம் நோக்கல்ல மக்கள் மத்தியில் புரிந்துணர்வு வளரவேண்டும் என்பதே இதன் நோக்கம். 

புனிதமிகு அல்குர்ஆன் 

இஸ்லாம் “மனிதம்” என்ற சொல்லை மிகவும் விரிந்த பார்வையிலேயே நோக்குகின்றது. மானிடப் பெருமானங்களை அது எப்போதும் மதிக்கின்றது. பின்வரும் சங்கைமிகு புனித அல்குர்ஆன் வசனம் இதனை நன்கு தெளிவுபடுத்துகின்றது. - 

“மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள் மேலும், அதே ஆன்மாவிலிருந்து அதனுடைய துணையை அவன் உண்டாக்கினான். மேலும் அவை இரண்டின் மூலம் (உலகில்) அதிகமான ஆண்களையும், பெண்களையும் பரவச்செய்தான். மேலும் எந்த அல்லாஹ்வின் பெயரைக்கூறி மற்றவரிடம் (உரிமைகளை) கோருகின்றீர்களோ அந்த அல்லாஹ்வுக்கே நீங்கள் அஞ்சுங்கள். மேலும் இரத்த பந்த உறவுகளைச் சீர்குலைப்பதிலிருந்து நீங்கள் விலகி வாழுங்கள் நிச்சயமாக அறிந்துகொள்ளுங்கள் அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்”  (அல்குர்ஆன் – அன்னிஸா : 01) 

நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மனித குலத்தின் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தார் என்பதை பின்வரும் திருக்குர்ஆன் வசனம் குறிப்பிடுகின்றது :- 

“அவர்கள் இந்தத் தூதை விசுவாசிக்காதபோது  நீர் உம்மையே மாய்த்துக்கொள்வீர் போலிருக்கிறதே” (அல்குர்ஆன் – அல்கஹ்ப் : 06) 

அல்குர்ஆனில் காணப்படுகின்ற சூறா யாஸீன் ஆனது முஸ்லிம்கள் மனிதர்களை “மனிதம்” என்ற பார்வையில் பார்க்க வேண்டும் என்பதை மிக அழகாக குறிப்பிடுகின்றது. 

“என் சமூகத்தவரே! இறைதூதரைப் பின்பற்றுங்கள்.  எவர்கள் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லையோ, மேலும் எவர்கள் நேர் வழியில் இருக்கின்றார்களோ அவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்....” (அல்குர்ஆன் – யாஸீன் : 20, 21) 

சகல தொழுகையின் பின்னும்  முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறுவார்கள் :- 

“இறைவா! எங்கள் இரட்சகனே! அரசனே! நீ அல்லாஹ் ஏகன் உனக்கு இணையேதுமில்லை என நான் சாட்சி பகர்கின்றேன். முஹம்மத் (ஸல்) அவர்கள்  எனது  தூதர் என்றுநான் நாட்சி சொல்கின்றேன். இறைவா எங்கள் இரட்சகனே! அரசனே! மனிதர்கள் அனைவரும் சகோதரர்கள் என நான் சான்று பகர்கின்றேன்.”  (முஸ்னத் அஹ்மத் , ஸுனன் அபீதாவூத்) 

நபிகளார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பின்வரும் கூற்றும் எடுத்துக் காட்டத்தக்கது :- 

“அநீதி இழைக்கப்படுபவனின் பிரார்த்தனைக்கிடையே  எந்த தடையுமில்லை.  அவன் காபிராக இருந்தாலும் கூட ” (அஹ்மத்) 

ஒருமுறை ஒரு யூதரொருவரின்   மையமொன்று  எடுத்துச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் அமைதியாக எழுந்து நின்றார்கள். “ஏன் எழுந்தீர்கள்? அது யூதனின் பிரேதமல்லவா? என்று கேட்கப்பட்டபோது  ‘அதுவும் ஓர் ஆன்மாவே’ என்று பதிலளித்தார்கள் (ஆதாரம் ; புகாரி) 

மக்கா குறைசிகள் நபிகளாருக்கு பல கொடுமைகள் செய்தபோதும் மக்கா வாசிகள் ஒரு பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட போது  அம்மக்களுக்கு நபி (ஸல்) அவர்கள் உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தார்கள்.

இத்தகைய பண்பாடான நடத்தை களாலே மக்கா வெற்றி கிடைத்தது. இஸ்லாத்தை ஏற்காத குறைசிக் காபிர்கள் நபி (ஸல்) அவர்களை ‘ஒருநல்ல சகோதரன்’ என்றும் ‘ஒரு நல்ல சகோதரனின் மகன்’ என்றும் குறித்துக்காட்டினர். 

நபி (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றியிருந்த முஷ்ரிக்களுடன் அழகிய பண்புகளால் உரையாடியிருக்கிறார். மக்கள் அவரை நெருங்குவதற்குக் காரணமாயிருந்த நிலையை அல்குர்ஆன் விளக்கும் போது, - 

“அல்லாஹ்வின் அருளால் நீர் மிருதுவாக நடந்துகொண்டீர். நடத்தையிலும், பேச்சிலும் நீர் இறுக்கமான போக்கைக் கொண்டவராகவும், ஈவிரக்கமற்ற தன்மையுடனும் நடந்திருப்பின் அவர்கள் உம்மை விட்டும் கலைந்து சென்றிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக அவர்களுக்காக பாவமன்னிப்புக் கேட்பீராக”  (அல்குர்ஆன் – ஆலஇம்ரான் : 159) 

நபிகளாரின் மனித குல பாசத்திற்கு பின்வரும் அவரது உபதேசம் சிறந்த உதாரணமாகும்: 

“உங்களுடைய சகோதரனைப் பார்த்து இன்முகம் காட்டி சிரிப்பது தர்மமாகும். நல்லதைச் செய்யும்படி ஏவுவதும், தீயதைச் செய்வதிலிருந்து அடுத்தவர்களைத் தடுப்பதும் தர்மமாகும். வழிகெட்டுப்போகாமலிருக்க ஒருவனுக்கு உதவி செய்வதும் தர்மமாகும். சாலையில் கிடக்கும் முட்கள், எலும்புகள் போன்ற தடையாக அமையும் பொருட்களை அகற்றுவதும் தர்மமாகும். உங்களது பாத்திரத்திலிருந்து உங்களது சகோதரனுடைய பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றுவதும் தர்மமாகும்.” (புகாரி) 

நபிகளாரின்  நற்குணங்களே  அவர் பற்றி மக்கள் கொண்டிருந்த தப்பபிப்பிராயங்கள் நீங்குவதற்கு காரணமாயின என்றால் அதுமிகையாகாது. 

“மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது” (அல்குர்ஆன் – அல்பகரா : 256) 

ஏ. எம். முஹம்மத் ஸப்வான், 

சீனன் கோட்டை , 


Add new comment

Or log in with...