Friday, April 26, 2024
Home » ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு

ஐ.ம.ச. தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பேரணிக்கு நீதிமன்றங்களின் உத்தரவு

- ஜனாதிபதி மாளிகை உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை

by Rizwan Segu Mohideen
January 30, 2024 12:19 pm 0 comment

– சில வீதிகளில் இடையூறு ஏற்படுத்துவதற்கு எதிராக உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தி கட்சி இன்று (30) ஒழுங்கு செய்துள்ள எதிர்ப்பு பேரணிக்கு எதிராக  கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம்,  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் ஆகியவற்றால் பல்வேறு உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளன.

இன்று (30) பிற்பகல் 1.30 மணிக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியினால் “மாற்றத்தை நாடும் வருடம்-2024” எனும் தொனிப் பொருளின் கீழ் கொழும்பில் எதிர்ப்பு பேரணி மற்றும் கூட்டம் ஒன்று நடத்தவுள்ளது.

குறித்த பேரணிக்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினாலும் உத்தரவொன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபுர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர், மற்றும் குறித்த பேரணியில் பங்குபற்றும் அனைத்து உறுப்பினர்கள் மற்றும் அவர்களை பின்பற்றுவோர் உள்ளிட்டோருக்கு நீதிமன்றம் பின்வரும் உத்தரவை பிறப்பித்துள்ளது.

மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மையவாடிக்கு அருகில் இருந்து பிரதீபா மாவத்தை, சத்தர்ம மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்ஆ பள்ளி சந்தி ஊடாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக சங்கராஜ மாவத்தை ஆகிய பாதைகளை பயன்படுத்தும் நபர்கள் மற்றும் நடைபாதையை பயன்படுத்துவோருக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளுதல் மற்றும் பிரதான வீதிக்கு இடையூறு ஏற்படும் வகையில் போக்குவரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் செயற்படுவதற்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த பேரணியில் பங்கேற்போர், ஜனாதிபதி மாளிகை, நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் காலி முகத்திடல் உள்ளிட்ட இடங்களுக்கு பிரவேசிப்பதை தடுத்து, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.​

இதேவேளை, பேரணியில் பங்கேற்போர் டீன்ஸ் வீதி, டி.பி. ஜாயா மாவத்தை, டெக்னிக்கல் சந்தி உள்ளிட்ட பகுதிகளுக்குள் நுழைய தடை விதித்து, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட பிரதான 16 பேர், மற்றும் போராட்டத்தில் கலந்துகொள்ளவுள்ள 500 இற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயினும், போராட்டக்காரர்களின் கருத்துரிமைக்கு இடையூறு விளைவிக்காமல் கருத்து தெரிவிக்கும் வகையில், மாளிகாகந்த நீதிமன்ற அதிகாரத்திற்கு உட்பட்ட பி.டி. சிறிசேன மைதானம் மற்றும் ஹைட் பார்க் மைதானம் ஆகியன ஒதுக்கப்படும் எனவும், அந்த மைதானங்களில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை எனவும், அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் மாளிகாகந்த நீதவான் லோச்சனி அபேவிக்ரம வீரசிங்க குறித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Court-Order-Against-SJB-Rally

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT