சிதம்பரத்துக்கு 5 நாள் தடுப்புக் காவல்; உத்தரவு பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம் | தினகரன்


சிதம்பரத்துக்கு 5 நாள் தடுப்புக் காவல்; உத்தரவு பிறப்பித்தது சிறப்பு நீதிமன்றம்

சொன்ன பதிலையே திரும்ப... திரும்ப சொல்கிறார்

 முன்னாள் மத்திய அமைச்சரான ப.சிதம்பரத்தை 5 நாள் சிபிஐ காவலில் விசாரிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. காவல் முடிந்தவுடன் சிதம்பரத்தை ஆஜர்படுத்த நீதிமன்றம் சி.பி.ஐக்கு உத்தரவிட்டுள்ளது.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரம், டில்லியில் உள்ள ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

விசாரணையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் தனது தரப்பு நியாயத்தை கூண்டில் ஏறி நின்று பேசினார்.

இதில் சிபிஐ தரப்பும், ப. சிதம்பரம் தரப்பும் மாறி மாறி வாதம் செய்தனர். இந்த வழக்கில் ப. சிதம்பரம் வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி தனது வாதத்தில் முக்கியமான வாதங்களை வைத்தார்.அதில், சிதம்பரத்திடம் கேள்வி கேட்க விரும்பினால் நீதிமன்றம் கேட்கலாம். அவர் பேச விரும்புகிறார் என்று அபிஷேக் மனு சிங்வி வாதம் செய்தார்.

ஆனால் இதை சிபிஐ கடுமையாக எதிர்த்தது. ஆனால் கடைசியில் ப. சிதம்பரம் பேச நீதிபதி அஜய் குமார் அனுமதிக்கப்பட்டார்.அதன்பின் ப. சிதம்பரம் தனது தரப்பு நியாயத்தை கூண்டில் ஏறி நின்று பேசினார். அதில், என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகளை நீதிமன்றம் உன்னிப்பாக பார்க்க வேண்டும்.

என்னிடம் கேட்ட கேள்வி எதற்கு நான் பதில் சொல்லாமல் தவிர்க்கவில்லை. உங்களிடம் சிபிஐ சமர்ப்பித்துள்ள ஆவணங்களை பாருங்கள். நான் அனைத்து கேள்விக்கும் பதில் அளித்துள்ளேன். என்னிடம் அவர்கள் வெளிநாட்டில் வங்கி கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள். நான் இல்லை என்று கூறினேன்.

அதன்பின் என்னுடைய மகன் கார்த்தியிடம் வெளிநாட்டில் கணக்கு இருக்கிறதா என்று கேட்டார்கள். ஆமாம் என்று கூறினேன். இப்படி அவர்கள் கேட்ட அனைத்து கேள்விக்கும் பதில் அளித்து முழு ஒத்துழைப்பு வழங்கினேன் என்று ப. சிதம்பரம் கூண்டில் ஏறி நின்று பேசினார்.

சிதம்பரத்தை கைது செய்ய வேண்டும் என்று தீவிரம் காட்டி வந்த சிபிஐ அதிகாரிகள் நேற்று இரவு அவரைக் கைது செய்து தங்கள் அலுவலகத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றுவிட்டனர்.

டெல்லி உயர் நீதிமன்றம், முன் பிணை மனுவை தள்ளுபடி செய்தது முதல் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் கைது செய்யப்படும் வரை நீடித்த பரபரப்பு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.

நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் சுவரை ஏறி குதித்து சிதம்பரத்தைக் கைது செய்த சிபிஐ அதிகாரிகள், சிபிஐ அலுவலகத்துக்கு சிதம்பரத்தைக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு சிபிஐ அதிகாரிகள் சிதம்பரத்துக்கு இரவு உணவை வழங்கினார்கள். ஆனால் அதனை ஏற்றுக் கொள்ள சிதம்பரம் மறுத்துவிட்டார்.

பிறகுதான் சிதம்பரத்திடம் சிபிஐ அதிகாரிகள் தங்களது ஏவுகணைக் கேள்விகளை ஆரம்பித்தனர்.

முதற்கட்டமாக சில அடிப்படையான விஷயங்களை சிதம்பரத்திடம் கேட்டறிந்த பிறகு நள்ளிரவு 12 மணியளவில் அவரிடம் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான கேள்விகளை அதிகாரிகள் அடுக்கினார்கள்.

விசாரணையின் போது சிபிஐயின் மூத்த அதிகாரிகளுடன், சிபிஐ இயக்குநர் ரிஷி குமார் ஷுக்லாவும் உடன் இருந்தார். சிதம்பரத்திடம் கேட்கப்பட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு சந்தேகமாக இருக்கிறது, தெரியவில்லை பதில் சொல்ல முடியாது என்ற பதில்களே சிதம்பரம் அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கு தொடர்பாக மிக முக்கியமான 20 கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

அதில் சில முக்கியக் கேள்விகள்..

1. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் அப்ரூவராக மாறியிருக்கும் இந்திராணி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியை உங்களுக்கு எப்படி தெரியும்?

2. ஏதேனும் ஒரு பத்திரிகையாளர் இந்திராணி முகர்ஜியுடன் உங்களை சந்திக்க வந்தாரா அல்லது இந்திராணி முகர்ஜியிடம் இருந்து பணத்தை பெறுவதில் பத்திரிகையாளர் யாராவது உதவினார்களா?

3. மகன் கார்த்தியின் கட்டுப்பாட்டில் எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து எவ்வளவு பணம் கைமாறியுள்ளது?

4. வீட்டில் நோட்டீஸ் ஒட்டப்பட்ட பிறகும் கூட, நீங்கள் ஏன் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்காக ஆஜராகவில்லை?

5. உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் சொந்தமாக இருக்கும் ஷெல் நிறுவனங்கள் எத்தனை?

6. யுகே, ஸ்பெயின், மலேசியா போன்ற நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவிக்க எங்கிருந்து பணம் வந்தது?

7. பார்சிலோனா டென்னிஸ் கிளப் வாங்க எவ்வளவு பணம் செலவிடப்பட்டது, அது எங்கிருந்து வந்த பணம்?

போன்ற கேள்விகள் கேட்கப்பட்டு அதற்கான பதில்கள் பதிவு செய்யப்பட்டன.

பிறகு அடுத்தச் சுற்று விசாரணை காலை 8 மணியளவில் தொடங்கியது. இந்த முக்கியக் கேள்விகளுடன் பல துணைக் கேள்விகளும் சிதம்பரத்திடம் எழுப்பப்பட்டன. விசாரணை முடிந்து நேற்று பிற்பகலில் அவர் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், விசாரணைக்குப் பிறகு டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் விசாரணை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் சிறப்பு நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையின் போது சிபிஐ அதிகாரிகள் கேட்ட பெரும்பாலான கேள்விகளுக்கு சிதம்பரம் மழுப்பலான பதில்களையே அளித்ததாக சிபிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

டெல்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சிபிஐ நீதிமன்ற நீதிபதி அஜய் குமார் குஹர் முன்பு நேற்று பிற்பகல் 3.15 மணியளவில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். சிபிஐ தரப்பில் வழக்குரைஞர் துஷார் மேத்தா ஆஜரானார். ஏற்கனவே சிதம்பரத்தின் வழக்குரைஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி உள்ளிட்டோர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர். மேலும் சிதம்பரத்தின் மனைவி நளினி மற்றும் மகன் கார்த்தி ஆகியோரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை:

நீதிமன்றத்தில் சிபிஐ அடுக்கிய குற்றச்சாட்டுகள்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்ட ப. சிதம்பரத்தை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சிபிஐ அவர் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளது.

சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ அதிகாரிகள் பல முக்கிய வாதங்களை முன் வைத்தனர்.

அதாவது ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கின் குற்றப்பத்திரிகையில் ப. சிதம்பரத்தின் பெயரை சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு தொடர்பான விசாரணையில் சிதம்பரம் போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. எந்தக் கேள்விக்கும் அவர் பதிலளிக்கவில்லை. வழக்கு தொடர்பான பல முக்கிய ஆதாரங்கள் அவர் வசம் உள்ளது. மௌனமாக இருப்பது அடிப்படை உரிமையாக இருக்கலாம். ஆனால் இவர் விசாரணையின் போது வாய்திறக்காமல் இருக்கிறார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நடந்த சதியை வெளிக் கொண்டு வருவதற்கு சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம். மேலும் சிதம்பரத்துக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சிபிஐ தனது வாதத்தை முன் வைத்தது. இதையடுத்து சிதம்பரம் தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட உள்ளன.

ஆதாரங்கள் அடிப்படையில் விசாரணை நடக்கவில்லை;

வேறு எதற்காகவோ நடக்கிறது: அபிஷேக் சிங்வி வாதம்

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு அடிப்படை ஆதாரங்களின் அடிப்படையில் நடக்கவில்லை, வேறு எதற்காகவோ நடக்கிறது என்று சிதம்பரம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தின் போது குறிப்பிட்டார்.

சிதம்பரத்திடம் சிபிஐ எதிர்பார்ப்பது கேள்விகளையா? பதில்களையா? என்று அபிஷேக் சிங்வி காட்டமான ஒரு கேள்வியையும் வாதத்தின் போது எழுப்பினார்.

முன்னதாக சிபிஐ தரப்பில் வாதங்கள் முன் வைக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் தரப்பில் வாதிடப்பட்டது.

வழக்குரைஞர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இடைக்கால முன்பிணையை 7 மாதங்கள் கழித்து டெல்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது ஏன்? சிபிஐயின் வாதங்களை அடிப்படையிலேயே எதிர்க்கிறேன்.

ஏற்கனவே விசாரணையின் போது கேட்கப்பட்ட கேள்விகளே சிதம்பரத்திடம் மீண்டும் கேட்கப்பட்டுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளித்ததில் சம்பந்தப்பட்ட 6 அரசு செயலாளர்களும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்று அபிஷேக் சிங்வி சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...