1,005 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை | தினகரன்


1,005 டெங்கு நோயாளர்களுக்கு சிகிச்சை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டின்  இதுவரையான காலப்பகுதியில்1,005 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளதாக, தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் வீ. குலராஜசேகரம் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு  மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் கூட்டமொன்று இன்று (20) இடம்பெற்றது.    மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந் தலைமையில் இக்கூட்டம் இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார அலுவலகமும், மாவட்ட செயலகமும் இணைந்து இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

அத்தோடு, மாவட்டத்தின் சகல பிரதேச சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் திண்மக்கழிவுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில்  ஆராயப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில்தற்போது டெங்கு நோயின் தாக்கம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில்மட்டக்களப்பு மாவட்டத்தில் 1005 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சையின் மூலம் குணமடைந்துள்ளனர்.

இவ்வருடம் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் எவ்வித இறப்பும் இடம்பெறவில்லை என தொற்றுநோய் தடுப்பு வைத்திய அதிகாரி டொக்டர்வீ.குலராஜசேகரம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,திண்மக்கழிவு தரம் பிரித்தல் தொடர்பாகவும்  பிரதேச சபைகளுக்கு ஏற்பட்டிருக்கின்ற பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டு பொது சுகாதார பரிசோதகர்கள், பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளும்  சேர்ந்து தரம் பிரித்தல்மற்றும் பாதுகாப்பான முறையில் கழிவகற்றல்போன்றவற்றை இவர்களின் கண்காணிப்பின் கீழ் நடைமுறைப்படுத்துவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இதேவேளை, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குறிப்பிடுகையில்,மாவட்டத்தில் தற்போதைய காலநிலையை கருத்தில் கொண்டு பாடசாலைச்சூழல்கள், பொது இடங்கள், வீடுகள்என எல்லா இடங்களிலும் டெங்கு அவதானிப்பை செலுத்துவது அவசியம் என்றும் இதனை நிலைபேறான நடைமுறையினைக் கடைப்பிடிப்பதன் மூலம் எமது மக்களை பாதுகாத்துக் கொள்ளலாம் என்றார்.

 (புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)

 


Add new comment

Or log in with...