காணாமல் போனோரது அலுவலகம் எமக்கான நீதியை பெற்றுத் தருமா? | தினகரன்


காணாமல் போனோரது அலுவலகம் எமக்கான நீதியை பெற்றுத் தருமா?

யாழ்.மாவட்டத்தில் காணாமல் போனவர்களது அலுவலகம் திறக்கப்பட்டால் அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என கூறியிருக்கும் வடகிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் ஊடாக பாதிக்கப்பட்ட தமக்கு நிதி மட்டுமே வழங்க முடியுமே தவிர நீதியை வழங்க முடியாது எனவும் கூறினர்.

காணாமல் போனவர்கள் அலுவலகம் எதிர்வரும் 24ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் திறக்கப்படவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பாக வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய சங்க பிரதிநிதிகள் யாழ்.ஊடக அமையத்தில் நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.

இதன்போது மேலும் அவர்கள் கூறுகையில்,

காணாமல்போனவர்கள் அலுவலக தலைவர் சாலிய பீரிஸ் உள்ளிட்ட சகலரையும் சந்தித்து இந்த அலுவலகம் ஊடாக எமக்கு நீதி கிடைக்காது. என்பதனை நாங்கள் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றோம். மேலும் இந்த அலுவலகத்தை வடக்கில் திறக்ககூடாது. என்பதையும் நாங்கள் கூறியிருந்தோம்.

அப்போது ஆம் என்றவர்கள் இப்போது யாழ்.மாவட்டத்தில் 24ஆம் திகதி அலுவலகத்தை திறக்கவுள்ளதாக கூறியிருக்கின்றனர். இது அடுத்துவரும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையக கூட்டத்தொடரில் சர்வதேச நாடுகளையும் தமிழ் மக்களையும் ஏமாற்றுவதற்கான சதி முயற்சியாகும்.

எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் திறப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். அந்த எதிர்ப்பு போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என கோரிக்கை முன்வைக்கின்றோம்.

இதேவேளை பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்காத அல்லது நீதியை பெற்றுத் தராத இந்த அலுவலகத்தை பாதிக்கப்பட்ட மக்களே எதிர்க்கின்ற நிலையில் அந்த மக்களின் வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் அரசியல் கட்சிகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றனர்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...