உண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம் | தினகரன்


உண்மைகளை மூடிமறைத்து வாழ்வதால் அமைதியை இழக்கும் ஆபத்து அதிகம்

எரேமியாவின் வாழ்க்கையை நினைவுறுத்தி வாழ்வோம்

பரிசுத்த வேதாகமத்தில் நாம் சந்திக்கும் பல இறைவாக்கினர்கள் இறைவார்த்தையால் பற்றியெரிந்தவர்கள். அவர்களில் ஒருவரான எரேமியா தன்னைப்பற்றி கூறும்போது, பற்றியெரியும் ஒரு இறைவாக்கினரை நம்மால் காணமுடிகிறது.

"அவர் பெயரைச் சொல்லமாட்டேன்; அவர் பெயரால் இனிப் பேசவும் மாட்டேன்" என்பேனாகில், உம் சொல் என் இதயத்தில் பற்றியெரியும் தீ போல இருக்கின்றது. அது என் எலும்புகளுக்குள் அடைப்பட்டுக் கிடக்கின்றது. அதனை அடக்கிவைத்துச் சோர்ந்து போனேன்; இனி என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. (எரேமியா 20: 9). என்ற கதறல் எரேமியாவிடமிருந்து எழுகிறது.

இறைவார்த்தையால் தூண்டப்பட்ட ஒரு தீப்பிழம்பாக வாழ்ந்த எரேமியாவின் உயிருக்கு வந்த ஆபத்தை  கடந்த ஞாயிறு முதல் வாசகம் (எரேமியா 38: 4-10) எடுத்துரைக்கிறது. எரேமியா இந்த நெருக்கடிக்கு உள்ளானதற்குக் காரணம் அவர் சொன்ன உண்மை. யூதேயா நாடு, பாபிலோனிய மன்னரால் கைப்பற்றப்படும்; கொடும் துன்பங்கள் தொடரும் என்ற உண்மையை மன்னரான செதேக்கியாவிடம் கூறினார் எரேமியா.

மிகவும் கசப்பான இந்த உண்மையை ஏற்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் மன்னர் தடுமாறினார். மன்னரது தடுமாற்றத்தை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட சில தலைவர்கள் எரேமியா ஒரு குற்றவாளி என பொய்யான பழியைச் சுமத்தி அவரைக் கொல்லும்படி மன்னரைத் தூண்டினர்.  உண்மையைப் பேசியதால் உயிரை இழக்கவேண்டியிருந்த பலரை இறைவாக்கினர் எரேமியா நம் நினைவுக்குக் கொணர்கிறார். அவர்களில் ஒருவர் எல் சல்வடோர் நாட்டில் கசப்பான உண்மைகளைப் பறைசாற்றிவந்த ஒரு பேராயர்.

1970களில் அமெரிக்க ஐக்கிய நாடு வழங்கிய நிதி உதவியுடன் எல் சல்வடோர்  அரசு, ஏழைகளை வதைத்து வந்தது. கருணை ஏதுமின்றி வறியோரைக் கொன்று குவித்த இராணுவத்திற்கு அமெரிக்க அரசு அளித்துவந்த நிதி உதவியை உடனே நிறுத்தவேண்டும் என சான் சல்வடோர் பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள் அமெரிக்க அரசுத் தலைவர் ஜிம்மி கார்ட்டருக்கு மடல் ஒன்றை அனுப்பினார்.அந்த மடல் அனுப்பப்பட்டு இரு மாதங்களுக்குப் பின் 1980ம் ஆண்டு மார்ச், 24ம் திகதி பேராயர் ரொமேரோ அவர்கள் திருப்பலி நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் கூலிப்படை ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். சல்வடோர் மக்களில் மட்டுமல்ல உலக மக்கள் நடுவிலும் பேராயர் ரொமேரோ அவர்கள் உயிர்பெற்று வாழ்கிறார் என்பதற்கு, உலக அரங்கிலும் கத்தோலிக்கத் திருஅவையிலும் அவர் பெற்றுள்ள புகழ் சான்றாக விளங்குகிறது.

2015ம் ஆண்டு மே 23ம் திகதி பேராயர் ரொமேரோ அவர்கள் கத்தோலிக்கத் திருஅவையால் ஓர் அருளாளரென அறிவிக்கப்பட்டார். 2018ம் ஆண்டு, அக்டோபர் 14ம் திகதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பேராயர் ரொமேரோவை புனிதராக உயர்த்தினார்.

தன்னைச் சுற்றி நிகழும் அநீதிகள், அவலங்கள் அனைத்தையும் கண்டபின் இறைவாக்கினர்களால் அமைதிகாக்க இயலாது.

(மிகுதி அடுத்த வாரம்)

ஜெரோம் லூயிஸ்


Add new comment

Or log in with...