மீட்பின் வரலாற்றோடு தொடர்புபட்ட அன்னை மரியாளின் திருவிழாக்கள் | தினகரன்


மீட்பின் வரலாற்றோடு தொடர்புபட்ட அன்னை மரியாளின் திருவிழாக்கள்

பழைய ஏற்பாட்டிலே கடவுளின் பேழையைத் தாவீது அரசர் மேளதாளத்துடன் தாரை தப்பட்டைகள் முழங்க (2 சாமு. 6:1-23) எருசலேம் நகருக்கு எடுத்துச் சென்றது போல இறைவனும் தன் திருமகன் இயேசுவின் பேழையாகிய அன்னை மரியாவை ஆரவாரத்தோடும், மகிழ்ச்சியோடும் தம் திருநகராகிய விண்ணகத்திற்கு அழைத்துச் சென்ற திரு நிகழ்வை நாம் விழாவாகக் கொண்டாடுகிறோம்.

மரியன்னைக்கு என உள்ள விழாக்களில் மூன்று மிகவும் குறிப்பிடத்தக்கவை. மரியாவின் அமல உற்பவப் பெருவிழா (டிசம்பர் 8). மங்கள் வார்த்தைப் பெருவிழா (மார்ச் 25). விண்ணேற்புப் பெருவிழா (ஆகஸ்ட் 15). இவை மூன்றும் மீட்பின் வரலாற்றோடு தொடர்பு கொண்டவை. அருள் மிகப் பெற்றவளே வாழ்க (லூக். 1:28) என்று வானதூதரால் அழைக்கப்பட்ட நம் அன்னை மரியாள் தான் பெற்ற அருளை முழுவதுமாக இவ்வுலகின் மீட்புக்காகச் செலவழித்தார். தன் மகனோடு இணைந்து இவ்வுலகின் மீட்புப் பணியில் ஈடுபட்டார்.

ஒரு பெண்ணால் (முதல் ஏவாள்) இழந்த விண்ணக வாழ்வும், மகிழ்வும் மற்றொரு பெண்ணால் (மரியாவின் வழியாக) மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற இறைவனின் திட்டத்தை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டார் அன்னை மரியா .

தீயோனின் வார்த்தையைக் கேட்டு அதைச் செயல்படுத்தி அதன் விளைவாக அழிவைத் தேடிக் கொண்டவள் முதல் ஏவாள். அதனால் கடவுளுக்கும், மனித குலத்திற்கும் இடையில் தடையாக முடிச்சுப் போட்டாள். ஆனால் இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருச்சபை (திருச்சபை 56) என்ற ஏட்டிலே கூறுவதுபோல, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு, அதை ஏற்று. அதைத் தன் உள்ளத்தில் இருத்திச் செயல்படுத்தி வாழ்வைத் தேடிக் கொண்டவள் மரியாள். போடப்பட்ட முடிச்சை தன் தாழ்ச்சி கீழ்ப்படிதலால் அவிழ்த்தவள் மரியாள்.

கடவுளைப்போல் ஆகவேண்டும் என்ற அகந்தையால் சுயநலத்தால் தூண்டப்பட்டவள் முதல் ஏவாள் . இதோ உமது அடிமை (லூக். 1:38) என்று சொல்லி, தன்னையே தாழ்த்தி அர்ப்பணம் ஆக்கியவள் மரியாள்.

நான் தவறு ஏதும் செய்யவில்லை. பாம்புதான் என்னை வஞ்சித்து ஏமாற்றியது என்று பிறர் மேல் குற்றம் சாற்றித் தன்னை நிரபராதியாக்க விரும்பியவள் முதல் ஏவாள். ஆனால் தான் கடவுளால் குற்றமற்றவராகப் படைக்கப்பட்டும், மனுக்குல மீட்பிற்காக, அதன் குற்றங்களை ஏற்றுக்கொண்ட தியாக தீபம் மரியாள்.

மரியா தன்னைத் தாழ்த்திக் கொண்டாள். எப்படியெனில் ஆற்று மணலில் முளைத்து வளர்ந்த நாணல் வெள்ளம் புரண்டு ஓடியபோது தண்ணீரோடு அடித்துச் செல்லப்படாமல் வளைந்து கொடுப்பது போல மரியா பணிந்து நின்றார்கள்.

கடவுளுக்கு ஏற்ற வாழ்க்கை நடத்திய ஏனோக்குக்கும் (தொநூ . 5:22) எலியாவுக்கும் (2 அரச 2:11) விண்ணேற்பு கொடையை இறைவன் வழங்கியது போல, தனிப்பெரும் சீடராகத் தாழ்ச்சி நிறைந்த மரியாவுக்குக் கிடைத்த பரிசுதான் விண்ணேற்பு.

எல்லாத் தலைமுறைகளும் என்னைப் பேறுடையாள் எனப் போற்றுமே (லூக். 1:48). ஏனெனில் நெஞ்சிலே செருக்குற்றோரைச் சிதறடித்து வருகிறார் (லூக். 1:50 - 53). தாழ்ந்தோரை உயர்த்தினார் என்று மரியா பாடிய பாடல் அவர்கள் வாழ்வில் நிறைவேறியது.

இந்த உண்மையை, சத்தியத்தைத்தான் 12 - ஆம் பத்திநாதர் விசுவாசச் சத்தியமாக 1950 - ஆம் ஆண்டு பிரகடனம் செய்தார்.


Add new comment

Or log in with...