மாதாவின் பிறப்பு கூறும் அற்புத நிகழ்வுகள் | தினகரன்


மாதாவின் பிறப்பு கூறும் அற்புத நிகழ்வுகள்

அன்னை மரியாளின் பிறப்பு ஒரு அற்புதமான நிகழ்வாகும்.கிறிஸ்துவுக்குப் பின் இரண்டாம்  நூற்றாண்டில் எழுதப்பட்ட  யாக்கோபின் முதல்நற்செய்தியானது கன்னி மரியாளின் பிறப்பை இவ்வாறு எடுத்துரைக்கின்றது.

எருசலேம் நகரில் வாழ்ந்த செல்வந்தரான சுவக்கீன் அவரது மனைவி அன்னம்மாள் இருவரும் குழந்தைப் பேறின்றி முதுமை அடைந்த நிலையில் இறைவன் தமது வானதூதர் வழியாக மரியாளின் பிறப்பை அவர்களுக்கு முன்னறிவித்தார்.

அதனால் மனம் மகிழ்ந்த மரியாளின் பெற்றோர் பிறக்கப் போகும் குழந்தையை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணிப்பதாக நேர்த்தி செய்து கொண்டனர்.

அதனையடுத்து பத்தாம் மாதத்தில் அன்னா குழந்தையைப் பெற்றெடுத்தார். வானதூதர் அறிவித்தபடியே அக்குழந்தைக்கு மரியாள் (கடலின் நட்சத்திரம்) என்று பெயரிட்டனர்.  மரியாளுக்கு மூன்று வயதானபோது அவரது பெற்றோர்கள் மரியாளை எருசலேம் ஆலயத்தில் அர்ப்பணித்தனர். அங்கிருந்த கல்விக்கூடத்தில் மரியாள் எபிரேய எழுத்துக்களை எழுதவும் வாசிக்கவும் கற்றுக்கொண்டார்.

பரிசுத்த வேதாகமத்தின் பழைய ஏற்பாட்டு நூல்களைப் படித்து அதில் இருந்த மெசியா பற்றிய  இறைவாக்குகளின் பொருளை உணர்ந்து தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார்.

மறை நூல்களின் வார்த்தைகளை வாசித்து அவற்றை மனதில் இருத்தி சிந்திப்பதில் மரியாள் ஆர்வம் கொண்டிருந்தார். பாடல்களைப் பாடுவதிலும் செபிப்பதிலும் சிறந்து விளங்கினார்.

ஆலயத்திற்கு தேவையான திரைச் சீலைகளை நெய்வதிலும் நன்கு தேர்ச்சி பெற்றார்.

மரியாளின் பிறப்பு பற்றி யாக்கோபின் முதல் நற்செய்தியில் காணப்படும் செய்தியே திருச்சபையின் மரபாக இந்நாள் வரை நிலைத்திருக்கிறது.

அத்துடன் மரியாளின் பிறப்பு செப்டம்பர் 8ஆம் திகதி நிகழ்ந்ததாக பழங்காலம் முதலே நம்பப்படுகிறது. மரியாள் இறைமகன் இயேசுவின் தாயாகுவதை அன்னாவின் வயிற்றில் கன்னி மரியாள் கருவாக உருவானபோதே பிறப்பு நிலைப் பாவமின்றி உற்பவித்ததாக கத்தோலிக்க திருச்சபை கற்பிக்கின்றது. கத்தோலிக்கத் திருச்சபை இயேசுவின் பிறப்பைப் போன்று அதற்கடுத்ததாக  கன்னி மரியாள் மற்றும் திருமுழுக்கு யோவான் ஆகியோரின் பிறப்பையே விழாவாக்க் கொண்டாடுகிறது. கன்னி மரியாளின் பிறப்பு விழா செப்டம்பர் 8ஆம் தேதி சிறப்பிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜொனா செல்வா


Add new comment

Or log in with...