தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் முயற்சி தோல்வி | தினகரன்


தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தும் முயற்சி தோல்வி

முஸ்லிம் சமூகத்தின் மீது போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி அத்துரலிய ரத்ன தேரரினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் வேடிக்கையானதாகும். அவர் முஸ்லிம்கள் மீது சுமத்துகின்ற குற்றச்சாட்டுக்கள் உண்மைக்கு புறம்பானவை எனவும் குறித்த ஆர்ப்பாட்டத்தினை புறக்கணித்த தமிழ் மக்களுக்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.சுபையிர் தெரிவித்தார். 

அத்துரலிய ரத்ன தேரரினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு இன்று (20) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பில் அத்துரலிய ரத்ன தேரரினால் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் அவரோடு வருகை தந்தவர்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் வங்குரோத்து நிலையில் உள்ள, தமிழ் சமூகத்தால் புறக்கனிக்கப்பட்ட சிலருமே கலந்துகொண்டனர். சிங்கள பௌத்த மக்களாலும், தமிழ் மக்களாலும் நிராகரிக்கப்பட்ட இவர்கள் தமது அரசியல் இருப்பிடத்தை தக்க வைத்து கொள்ளுவதற்காகவே இவ்வாறு செயற்படுகின்றனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது தமிழ், முஸ்லிம், உறவில் விரிசலை ஏற்படுத்துவதற்கான ஒரு அரசியல் நாடகமாகும். அத்துரலிய ரத்ன தேரர் குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்த போதும் அந்த அழைப்பினை தமிழ் மக்கள் புறக்கணித்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்திற்கான அழைப்பு தொடர்பில் தமிழ் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டமை, தமிழ் மக்கள், தமிழ் முஸ்லிம் உறவை இன்னும் நேசிப்பதனை வெளிக்காட்டியிருக்கிறது.

மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் தொடர்பிலும், முஸ்லிம் சமூகம் தொடர்பிலும் போலி பிரச்சாரங்களை மேற்கொள்ளும் ரத்ன தேரர், தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறி, தமிழ், முஸ்லிம் உறவை தூரமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார். அதற்காக இனவாத கருத்துக்களையே அவர் பேசி வருகின்றார். குறிப்பாக அத்துரலிய ரத்ன தேரர் கடந்த காலங்களில் சிறுபான்மை மக்கள் மீது கூறிய கருத்துக்களை நாம் மீட்டிப் பார்க்க வேண்டியுள்ளது.

இந்த நாட்டில் சமாதானத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அவரது செயற்படுகளும், கருத்துக்களும் அமைந்துள்ளன. அவர் குருநாகல் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுத்த செயற்பாடுகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்தது. பெரும்பான்மை சமூகம் கூட அவரது நடவடிக்கைகளை ஆதரிக்கவில்லை. இதன்காரணமாகவே, தமிழ் மக்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், அம்மக்களுக்கு நன்மை செய்யப் போவதாகவும் கூறிக்கொண்டு தமிழ் மக்களின் ஆதரவினைப் பெற்று, தனது இனவாத வேலைத்திட்டத்தினை முன்னெடுக்கப்பார்க்கிறார். இறுதியில் மட்டக்களப்பிலும் அவர் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்தது.

இலங்கையில் இடம்பெற்று வந்த இனமுரண்பாடு, ஆயுத  ரீதியான  போராட்டமாக மாறியமை  தமிழ், முஸ்லிம் உறவில் வெகுவான பாதிப்புக்களை ஏற்படுத்தியது. குறித்த போராட்டமானது இவ்விரு சமூகங்களின் உறவிலும் பாிய விரிசலை ஏற்படுத்தியது. தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் கசப்புணர்வுகளும், முரண்பாடுகளும்  காணப்பட்ட போதிலும் அண்மைக்காலங்களில் இவ்விரு இனங்களுக்கிடையிலான நல்லுறவு போற்றத்தக்க வகையில் மீண்டும் கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. 

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கியமாக வாழும் தமிழ், முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்த ரத்ன தேரர் மேற்கொண்ட முயற்சி தொடர்பில் தமிழ் மக்கள் நிதானத்துடனும், அவதானத்துடனும் செயற்பட்டமை வரவேற்கத்தக்க விடயமாகும். குறிப்பாக எமது சமூகங்களுக்கிடையில் காணப்படுகின்ற சிறிய பிரச்சினைகளையும், கசப்புணர்வுகளையும் தீர்ப்பதில் எமது  அரசியல் தலைவர்கள் அசட்டையாக இருந்தாலும், சிவில் சமூகத்தவர்கள் தமிழ், முஸ்லிம் உறவை கட்டியெழுப்புகின்ற விடயத்தில் மிகவும் கரிசனையாகவுள்ளனர்.

(பாலமுனை விசேட நிருபர் ஏ.எல். றியாஸ்)


Add new comment

Or log in with...