அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்வரும் 22 ஆம் திகதி வியாழக்கிழமை வேலை நிறுத்தமொன்றில் இறங்கப்போவதாக அறிவித்துள்ளது.
எதிர்வரும் வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆரம்பமாகும் வேலை நிறுத்தம் அடுத்த நாளான வெள்ளிக்கிழமை வைர தொடரும் என்று சங்கம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் கூறப்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் மருந்து வகைகள் பெருமளவில் பற்றாக்குறையாக இருத்தல், மருத்துவ கல்விக்கு ஆகக் குறைந்த தரத்தை அறிவிக்காமை, டாக்டர்களுக்கான நடவடிக்கை குறிப்பை மாற்றியமைத்தமை, விஞ்ஞான பாடங்களில் உயர்தரம் கூட சித்தியடையாதவர்களுக்கு மருத்துவ நியமனங்களை வழங்க சட்டவிரோத முயற்சிகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காகவே இவ்வாறு வேலை நிறுத்தத்தில் இறங்குவதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறுகிறது.
எவ்வாறாயினும் மகப்பேற்று வைத்தியசாலைகள், சிறுவர் ஆஸ்பத்திரி, மஹரகம அபேக்ஸா வைத்தியசாலை, சிறுநீரக நோய்க்கான சிகிச்சை அலகுகள் மற்றும் இராணுவ ஆஸ்பத்திரிகளில் இந்த வேலை நிறுத்த செயற்பாடுகள் இடம்பெறாது என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கூறியுள்ளது.
Add new comment