மூன்று ஐரோப்பிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர் | தினகரன்


மூன்று ஐரோப்பிய தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்

இலங்கைக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஐரோப்பிய தூதுவர்கள் இருவரும் உயர்ஸ்தானிகர் ஒருவரும் இன்று (19) முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் தமது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

நோர்வே நாட்டுக்கு ட்ரைன் எஸ்கெடல் (Trine Eskedal), ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு சாரா ஹல்டன் (Sarah Hulton) மற்றும் நெதர்லாந்து நாட்டுக்கு தஞ்சா கோங்க்க்ரிஜ்ப் (Tanja Gonggrijp) ஆகிய தூதுவர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய தூதுவர்கள் முன்னிலையில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த மூன்று நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகால நெருங்கிய உறவுகள் இருந்து வருவதாக தெரிவித்தார்.

இந்த உறவுகளை புதிய வழிகளில் மேலும் பலப்படுத்துவதற்கு புதிய தூதுவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் இந்த தூதுவர்கள் மூவரும் பெண்களாக இருப்பது மகளிர் வலுவூட்டல் தொடர்பில் ஒரு முக்கிய அறிகுறியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, இலங்கையில் சுமார் 52சதவீதமாகவுள்ள பெண்கள் தேசிய பொருளாதாரத்திற்கு மேற்கொண்டுவரும் முக்கிய பணிகளையும் நினைவுகூர்ந்தார்.

இதன்போது புதிய தூதுவர்கள் தமது நாடுகளின் தலைவர்களின் வாழ்த்துச் செய்திகளை ஜனாதிபதியிடம் வழங்கியதுடன், தமது நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகளை பயனுள்ள வகையில் பலப்படுத்துவதற்கு தமது பதவிக்காலத்தில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் ஜனாதிபதியிடம் உறுதியளித்தனர்.

இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் எசெல வீரக்கோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.


Add new comment

Or log in with...