நெல்லின் உத்தரவாத விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது | தினகரன்


நெல்லின் உத்தரவாத விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது

சிறுபோகத்தில் விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் நெல்லின் உத்தரவாத விலை ஐந்து ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், இம்முறை கொள்வனவு செய்யும் ஒரு கிலோகிராம் நாட்டரிசியின் விலை ஐந்து ரூபாவினால் அதிகரித்து 38 ரூபாவாக இருந்து 43 ரூபா வரை அதிகரிக்கப்படவுள்ளது.

இதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் பீ. ஹரிசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூரின் முயற்சியினால் விவசாய, கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடைகள் அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சின் 4 மில்லியன் ரூபாய் நிதியில் சம்மாந்துறை புளக் “ஜே” பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர்ப்பாசன திணைக்களத்தின் விடுதிக் கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம்(17) சம்மாந்துறை பிராந்திய நீர்ப்பாசனத் திணைக்களப் பொறியியலாளர் எம்.எஸ்.எம். நவாஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதில் அமைச்சர் பீ. ஹரிசன் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,-  

நாட்டில் வரட்சியான காலங்களில் விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் கூடுதலான விளைச்சலைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாகயிருக்கும். ஆனால் எமது விவசாயிகள் நீரை வயல்நிலங்களில் முற்றாக நிரப்பி வைத்துக் கொண்டு புற்களை கட்டுப்படுத்தி வேளாண்மைச் செய்கின்றனர்.

இதனால் நீர் வீண் விரயம் செய்யப்படுவதுடன், விளைச்சலும் குறைவடைகின்றது.   விவசாயிகள் இனிவரும் காலங்களில் வேளாண்மை அறுவடை செய்வதற்கு முன்னரே பாசிப்பயறு போன்ற உப உணவுப் பயிச்செய்கையை பயிரிட்டு அதன்மூலம் கூடுதலான வருமானத்தை ஈட்டலாம்.  

எனவே, விவசாயிகள் இனிவரும் காலங்களில் வேளாண்மையை மட்டும் நம்பியிருக்காமல் நீர் தட்டுப்பாடான காலங்களில் வேறு பயிர்களைச் செய்து தங்களின் வருமானத்தை பெருக்கிக் கொள்ளலாம் என்றார்.  

இந்நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்  கோடீஸ்வரன், அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வீ.ஜெகதீசன், நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் எஸ்.மோகனராஜா, மேலதிகப் பணிப்பாளர் நாயகம் பொறியிலாளர் கே.டி. நிஹால் சிறிவர்த்தன உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

(சம்மாந்துறை கிழக்கு தினகரன்,அம்பாறை சுழற்சி நிருபர்கள்)   


Add new comment

Or log in with...