மோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி | தினகரன்

மோடிக்கு எதிராக திருப்பூரில் கறுப்புக் கொடி

வைகோ உட்பட மதிமுகவினர் கைது

பிரதமர் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ கைது செய்யப்ட்டார். 

பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் திருப்பூர் புதிய பஸ் நிலையம் முன்பு கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால் அதே இடத்தில் பிரதமர் மோடியை வரவேற்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்தி வரவேற்பு அளிக்கப்படும் என அறிவித்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது. நேற்று அதிகாலை முதலே பஸ் நிலையம் அருகே பொலிஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்பட்டிருந்தது. 

இந்நிலையில் நேற்றுக் காலை 11.15மணி அளவில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் 200க்கும் மேற்பட்டோர் ரயில் நிலையம் அருகே கருப்புக் கொடியுடன் திரண்டனர். 

அப்போது பா. ஜனதாவை சேர்ந்த பெண் உட்பட 2பேர் கூட்டத்துக்குள் புகுந்தனர். அந்த பெண் ‘பாரத் மாதா கீ ஜே’ என கோ‌ஷம் எழுப்பியபடி செருப்பை தூக்கி வீசினார். அவருடன் வந்தவர் கூட்டத்தை நோக்கி கற்களை வீசினார். இதில் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடிகள் உடைந்தது.  இதனால் ஆவேசமடைந்த ம.தி.மு.கவினர் அந்தப் பெண்ணை தாக்கினர். இதனால் அங்கு பரபரப்பு அதிகரித்தது. உடனே அந்தப் பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் தடியடி நடத்தினர். இதனால் அங்கு நின்றவர்கள் சிதறியடித்து ஓடினர். பின்னர் பொலிஸார், அந்த பெண்ணையும் அவருடன் வந்தவரையும் பிடித்து பொலிஸ் வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். 

இதற்கிடையே அங்கு திரண்ட ம.தி.மு.க.வினர் மோடிக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து தடைமீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக வைகோ மற்றும் ம.தி.மு.க.வினரை பொலிஸார் கைது செய்தனர்.  கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட போது பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிடவில்லை. விரைவில் பாராளுமன்றத் தேர்தல் வர இருப்பதால் அரசு திட்டங்கள் என்ற பெயரில் மக்களை சந்திக்க வருவது கடும் கண்டனத்துக்குரியது. எனவே தான் பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகிறோம். இவ்வாறு அவர் கூறினார். 


Add new comment

Or log in with...