எதிர்த்தரப்பு வேட்பாளர் எமக்கு சவால் இல்லை | தினகரன்


எதிர்த்தரப்பு வேட்பாளர் எமக்கு சவால் இல்லை

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவும், பாராளுமன்ற குழுவுமே தீர்மானிக்கும் என்பதுடன் கட்டாயம் ஜனாதிபதி வேட்பாளர் ஐ.தே.கவை சேர்ந்தவராகவே இருப்பார் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.  

நேற்றுமுன்தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.  

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,   ஐ.தே.க. ஒரு ஜனநாயக கட்சி. எமது கட்சியில் எந்தவொரு தீர்மானமாகவிருந்தாலும் அதனை மத்திய செயற்குழுவும், பாராளுமன்ற குழுவும் கூடியே முடிவுசெய்யும்.  

பலவிதமான கருத்துகள் உள்ளன. தலைவர்கள் சபையும், அதிகாரிகள் சபையும் எமது கட்சியினுள் உள்ளன. இவர்கள் அனைவரும் கலந்துரையாடல்களை நடத்தியே உரிய தீர்மானத்தை எடுப்பார்கள்.  

எமது பாரிய கூட்டணியில் அதிகளவானோர் இணைந்து கொள்ளவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொதுஜன பெரமுனவில் இருந்தும் சிலர் இணைந்து கொள்ளவுள்ளனர்.   ஐ.தே.கவுக்கு வெற்றியை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரு வேட்பாளர் உருவாகியுள்ளார். ஆகவே, எதிர்தரப்பு வேட்பாளர் எமக்கு ஒரு சவால் இல்லை.

இளைய தலைவர்கள் எமக்கு உள்ளனர். எமது கூட்டணியின் வேட்பாளர் கட்டாயம் ஐ.தே.கவை சேர்ந்தவராகவே இருப்பார் என்றார்.    

சுப்பிரமணியம் நிஷாந்த   


Add new comment

Or log in with...