ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க | தினகரன்

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க

20 வருடங்களின் பின் வேட்பாளரை களமிறக்கியது

ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) கட்சித் தலைவர் அநுர குமார திஸாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

இன்று (18) பிற்பகல் கொழும்பின் காலி முகத்திடலில் இடம்பெற்ற 'தேசிய மக்கள் சக்தி' எனும் பெயரில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் இது அறிவிக்கப்பட்டது.

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க-NPP-JVP Presidential Candidate-Anura Kumara Dissanayake

நாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் வந்த பல்லாயிரக்கணக்கான மக்களின் பங்கேற்புடன் இன்று (18) பிற்பகல் 4.00 மணியளவில் காலி முகத்திடலில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றிருந்தது.

மாலை 6.00 மணியளவில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அநுர குமார திஸாநாயக்கவின் பெயர் அறிவிக்கப்பட்டது.

ஜே.வி.பியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க-NPP-JVP Presidential Candidate-Anura Kumara Dissanayake

இதன் மூலம் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை அக்கட்சி அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய ஜேவிபியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க, நாட்டின் செழிப்பான பாதையை நோக்கி அனைவரும் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், கலைஞர் அமைப்புக்கள் என 28 அமைப்புக்கள் ஒன்றிணைந்து 'தேசிய மக்கள் சக்தி' என்ற கூட்டணியை உருவாக்கியிருந்தன. இந்தக் கூட்டணியின் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பை வெளியிடுவதற்கான மக்கள் பேரணி காலி முகத்திடலில் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் இலட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டிருந்ததுடன், காலிமுகத்திடல் ஜனசமுத்திரம்போல காட்சியளித்தது. பிற்பகல் 4 மணிக்கு கூட்டம் ஆரம்பமானது. கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆரம்பத்தில் உரையாற்றினர். 

ஜே.வி.பியின் அரசியல் வரலாற்றில் 20 வருடங்களின் பின்னர் தமது கட்சி சார்பில் வேட்பாளர் ஒருவரை அக்கட்சி இறக்கியுள்ளது. முன்னதாக 1999ஆம் ஆண்டும் ஜே.வி.பியின் சார்பில் நந்தன குணதிலக ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அதன் பின்னர் 2004ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் அப்போது வேட்பாளராகவிருந்த மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு ஜே.வி.பி ஆதரவு வழங்கியது. அதன் பின்னர் 2010ஆம் ஆண்டு சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கியது. அதன் பின்னர் 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளருக்கும் ஜே.வி.பி நேரடியாக ஆதரவு வழங்கியிருக்காதபோதும், மஹிந்த ராஜபக்‌ஷ நிர்வாகத்துக்கு எதிரான பிரசாரங்களை முன்னெடுத்திருந்தது. இந்த நிலையில் சுமார் 20 வருடங்களின் பின்னர் ஜே.வி.பி தனது வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கியுள்ளது. கலேவெல என்ற கிராமத்தில் 1968ஆம் ஆண்டு பிறந்த இவர் தம்புத்தேகம காமினி வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியைக் கற்றதுடன், தம்புத்தேகம மத்திய கல்லூரியில் உயர்கல்வியைப் பயின்றார். அக்கல்லூரியிலிருந்து பல்கலைகழகத்துக்குத் தெரிவாகி பாடசாலைக்குப் பெருமை சேர்த்ததுடன், 1995ஆம் ஆண்டு பட்டதாரியாக வெளியேறினார். 

1997ஆம் ஆண்டு ஜே.வி.பியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும், 1998 இல் ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினராகவும் செயற்பாட்டு அரசியலுக்கு உள்வாங்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு மத்திய மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்கியதுடன், 2000ஆம் ஆண்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்.   

மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...