திருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு | தினகரன்


திருகோணமலை சிறைச்சாலையில் கைதி உயிரிழப்பு

போதைப்பொருள் தொடர்புடைய வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட கைதியொருவர் திருகோணமலை சிறைச்சாலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாக துறைமுக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் கொழும்பு - 12மாட்டிஸ்லேன், இலக்கம் 6வசித்து வந்த ஜயசிங்க ஆராய்ச்சிலாகே ஜகத் சின்தக (49வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது, கொழும்பு, கெசல்வத்த பொலிஸாரினால் கடந்த 12ஆம் திகதி கைது செய்யப்பட்டு கொழும்பு நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பட்ட நிலையில் அவரை மூன்று மாதத்திற்கு கடூழிய சிறை தண்டனை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் அவர் கடந்த 2நாட்களுக்கு முன்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து திருகோணமலை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றிரவு (17) உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸ் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறைக்கைதியின் சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தமை தொடர்பில் சட்ட வைத்திய பரிசோதனைகளை முன்னெடுக்க உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இருந்தபோதிலும் தனது தந்தை உயிரிழந்தமை தொடர்பில் தனக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் உயிரிழந்தவரின் மகன் பிரதீப் நிரோசன பொலிஸாரிடம்  முறையிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த 12ஆம் திகதி தந்தையை கைது செய்யும்போது கொழும்பு-கெசல்வத்த பொலிஸார் தந்தையை தாக்கியதாகவும் இதனால் தந்தைக்கு ஏதாவது ஏற்பட்டிருக்குமோ என்ற சந்தேகம் நிலவி உள்ளதாகவும் மகன் பொலிஸாரிடம் தெரிவித்தார்.

(ரொட்டவெவ குறூப் நிருபர் அப்துல்சலாம் யாசீம்)


Add new comment

Or log in with...