Thursday, March 28, 2024
Home » கண்டியில் பாரிய அபிவிருத்திகள் ரூ.3,000 கோடி செலவில் திட்டம்

கண்டியில் பாரிய அபிவிருத்திகள் ரூ.3,000 கோடி செலவில் திட்டம்

இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி

by damith
January 29, 2024 9:30 am 0 comment

கண்டி பல்வகை போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகள் இரண்டு வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படுமென போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

பாரிய கண்டி வேலைத்திட்டத்தின் கீழ், இதனுடன் தொடர்பான பல வீதிகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி நிதி வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பல வருடங்களாக பூர்த்தி செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட கண்டி பல்வகை போக்குவரத்து முனைய அபிவிருத்தித் திட்டத்தின் நிர்மாணப் பணிகளை, கடந்த 27 இல், ஆரம்பித்து வைத்த பின்னர் அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கண்டி நகரில் காணப்படும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் முறைசாரா தன்மையை இல்லாதொழிக்கும் வகையில் பேராதனை மற்றும் மொறட்டுவை பல்கலைக்கழகங்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வுத் திட்டத்தின் படி இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். இத் திட்டம் 2026 ஆம் ஆண்டில் பூர்த்தி செய்யப்படவுள்ளது.

சுமார் 3,000 கோடி ரூபா செலவில், கண்டி பேராதனை வீதி மற்றும் கண்டி ரயில் நிலையம் மற்றும் குட்செட் பஸ் நிலையம் அருகில் சுமார் மூன்று ஏக்கர் நிலப்பரப்பை மையமாகக் கொண்டு இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டம், செயல்படும் போது ஒரே இடத்திலிருந்து அனைத்து பஸ் சேவைகளும் இயக்கப்படும். நாளொன்றுக்கு 193 இடங்களுக்கு, ஐயாயிரம் பஸ் சேவைகள் மூலம் சுமார் மூன்று இலட்சத்து முப்பதாயிரம் பயணிகளை கொண்டு செல்வது மற்றும் கையாள்வது இதன் நோக்கமாகும். தொண்ணூற்று நான்கு பஸ்வண்டி நிறுத்தங்கள், பதின்மூன்று காத்திருப்பு நிறுத்தங்கள், அவசர நிறுத்த நடவடிக்கைகள், நிர்வாக அலகு, ஓய்வு அறைகள், செயல்பாட்டு வளாகங்கள், மோட்டார் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் நிறுத்துமிடங்கள், உள்ளிட்ட பல பிரிவுகளைக் கொண்ட மூன்று அடுக்கு முனையம் இதன்படி அமைக்கப்படும்.

2028 இல் ஆட்சியமைக்க எதிர்பார்ப்பவர்கள் 14 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு மேல் சர்வதேச கையிருப்பை வைத்திருக்க வேண்டும் என்றும், உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி இல்லாமல் இந்த நாட்டை எவராவது காப்பாற்றுவார்கள் என்று கூறுவது முட்டாள்தனமான கருத்து என்றும் கூறினார்.

இந்த நிலைமையை புரிந்து கொண்டு வீழ்ந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப பழைய தவறுகளை செய்யாமல் இந்த நடைமுறை யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். நாடு பொருளாதார ரீதியாக சிறந்து விளங்கும் போது கண்டியை மையமாக கொண்டு மத்திய மாகாணத்தில் எஞ்சிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் எனவும் அமைச்சர் பந்துலு குணவர்தன மேலும் தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி நகரை மாற்றியமைக்கும் பாரிய செயற்திட்டமொன்றை ஆரம்பித்து வைப்பதில் மகிழ்ச்சியடைவதாகவும், ஒரு நாடாகவும் தேசமாகவும் நாம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT