மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு | தினகரன்


மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு

மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு-Mahesh Senanayake-Shavendra Silva
இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, இராணுவ பிரதம அதிகாரி (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா

பதவிக்காலம் நீடிக்கப்படலாம் என எதிர்பார்ப்பு

இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

அவரது பதவிக்காலத்தை இன்னும் சில மாதங்களுக்கு நீடிப்பதா? அல்லது புதிய இராணுவத் தளபதியை நியமிப்பதா? என்பது தொடர்பில் இன்னும் முடிவுகள் எடுக்கப்படவில்லையென அறிய முடிகிறது.

2017 ஆம் ஆண்டு ஓகஸ்டில் ஓய்வு பெறவிருந்த அவர், 2017 ஜூலை 04 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டதோடு, சேவை நீடிப்பும் வழங்கப்பட்டிருந்தது.

லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவுக்கு அடுத்தபடியாக, இரண்டு மூத்த அதிகாரிகள் இராணுவத் தளபதிக்கான பதவிக்கு தகுதியுடையவர்களாக காணப்படுகின்றனர்.

தற்போது இராணுவத் தலைமை அதிகாரியாக இரண்டாவது இடத்தில் உள்ள தற்போதைய இராணுவ பிரதம அதிகாரி (Chief of Staff) மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் தொண்டர் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சத்யப்பிரிய லியனகே ஆகியோரே உள்ளனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மிகவும் நெருக்கமானவராக மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா செயற்பட்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், கடந்த ஜூலை மாதம் ஓய்வு பெற வேண்டிய மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வாவுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆறுமாத காலம் சேவை நீடிப்பு வழங்கியிருந்தார்.

இராணுவத்தில் இரண்டாவது நிலை அதிகாரியாக இருக்கும் மேஜர் ஜெனரல் ஷவேந்திர சில்வா, இறுதிப் போரில் 2009 காலப் பகுதியில் சர்ச்சைக்குரிய 58 ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் என்பதோடு, குறித்த 58 ஆவது பிரிவு யுத்தம் தொடர்பான மனித உரிமை விதிமுறைகளை மீறியதாக ஐக்கிய நாடுகளினால் யுத்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.

இறுதி யுத்தத்தின்போது, வெள்ளை கொடியுடன் அவர் தலைமையிலான குறித்த படைப்பிரிவிடம் சரணடைந்தவர்களை கொன்று குவித்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Add new comment

Or log in with...