Tuesday, April 23, 2024
Home » அதிக வட்டி தருவதாக கூறி பிரமிட் முறையில் நிதி மோசடி

அதிக வட்டி தருவதாக கூறி பிரமிட் முறையில் நிதி மோசடி

by damith
January 29, 2024 6:30 am 0 comment
  • ஆயிரம் பேரிடம் ரூபா 500 கோடியை பெற்று தலைமறைவானவர் கைது
  • பஸ்நாயக நிலமேயாக நடித்து ஊரிலிருந்து வெளியேறல்
  • பெப். 05 வரை விளக்கமறியல்; கஹட்டகஸ்திகிலிய பதில் மஜிஸ்திரேட் நீதவான் உத்தரவு

பிரமிட் முறையில்,500 கோடி ரூபா நிதியை மோசடிசெய்துள்ள சந்தேகநபரை பெப்ரவரி 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கஹட்டகஸ்திகிலிய பதில் மஜிஸ்திரேட் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கலன்பிந்துனுவெவ மற்றும் அதனை அண்டிய பிரதேச மக்களிடமிருந்து பணத்தை பெற்ற இந்நபர்,இம்மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

இவரை,சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கண்டி பிலிமத்தலாவ பிரதேசத்தில் தலைமறைவாக வசித்த நிலையிலேயே இந்நபரை அதிகாரிகள் கைது செய்தனர்.

39 வயதான சந்தேக நபர் அந்நிதியில் கலன்பிந்துனுவெவ, அநுராதபுரம், கடவத்தை மற்றும் மாத்தளை பிரதேசங்களில் வீடு மற்றும் காணிகளையும் கொள்வனவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ட்ரேட்வின் என்ற பெயரில் நிதி நிறுவனமொன்றை ஸ்தாபித்து இந்நபர், செய்துள்ள மோசடிகள் தொடர்பில் பல முறைப்பாடுகள் பொலிஸாருக்குக் கிடைத்துள்ளன.

இணையத்தளம் மூலம் பணத்தை வைப்பிலிடும் முறைமையின் கீழ், இந்த மோசடியில் இவர் மேற்கொண்டுள்ளார். அவரது நிறுவனத்தில் நிதியை முதலீடு செய்துள்ள நபர்கள் கடந்த ஜுலை 11 ஆம் திகதி கலன்பிந்துனுவெவ நகரில் ஆர்ப்பாட்டமொன்றையும் மேற்கொண்டிருந்தனர்.

1,000 க்கும் மேற்பட்டோர்களின் நிதியை இவ்வாறு இவர் மோசடி செய்துள்ளதுடன், பல மாதங்களாக அவரால் நடத்தப்பட்டு வந்த நிறுவனத்தையும் மூடியிருந்தார்.பின்னர், கலன்பிந்துனுவெவ அஸ்ஸயாபெந்திவெவ பகுதியை வசிப்பிடமாகக்கொண்ட பஸ்நாயக்க நிலமே என, தம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு அப்பிரதேசத்திலி ருந்து இவர்,தலைமறைவாகியுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தில் பிரபலமான விஹாரையொன்றின் பஸ்நாயக்க நிலமேயாக இவர் பதவி வகித்துள்ளதாகவும் சந்தேகநபர் பிரதேசவாசிகளிடம் தெரிவித்துள்ளார்.

அந்த நம்பிக்கையிலேயே மக்கள் அவரது நிறுவனத்தில் பணத்தை வைப்புச்செய்துள்ளனர்.

இவருடன் தகாத உறவு கொண்டிருந்த பெண் ஒருவரின் பெயரில், 80 இலட்சம் ரூபாவை நிலையான வைப்பிலிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இப்பெண்ணையும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர் .

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT