கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம் | தினகரன்

கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்

கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்க இணையத்தளம்-Mobile Phone Missing-Ineed Police LK

காணாமல் போன மற்றும் களவாடப்பட்ட கையடக்க தொலைபேசிகளை கண்டுபிடிக்கும் நோக்கில் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக புதிய இணையதளம் ஒன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது.

www.indeed.police.lk எனும் குறித்த இணையத்தளம் இன்று (11) பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவினால்ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

குறித்த இணையதளத்தின் வழியாக தங்களது விபரங்களை பதிவு செய்து அதனூடாக தங்களது காணாமல் போன அல்லது களவாடப்பட்டு கையடக்க தொலைபேசிகளின்  விபரங்களை வழங்குவதன் மூலம் அதனை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

செயற்படும் விதம்

www.indeed.police.lk எனும் இணையதளத்திற்கு சென்று, அதில்  தங்களது விபரங்களை பதிவு செய்து, அதன் பின்னர் அதில் பயனர்பெயர் (User Name) மற்றும் கடவுச்சொல்லை (Password) வழங்கி இணையத்தளத்திற்குள் நுழைந்து உரிய தகவல்களை வழங்க வேண்டும்.

இதன்மூலம் முறைப்பாட்டாளர் பொலிஸ் நிலையத்திற்கு செல்லாது, தனது முறைப்பாட்டை மேற்கொள்ளும் வாய்ப்பு காணப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன் பின்னர், குறித்த முறைப்பாடு கணனி வலையமைப்பின் ஊடாக தொலைத்தொடர்பாடல் ஆணைக் குழுவிற்கு அனுப்பி வைக்கப்படுவதால், குறித்த முறைப்பாட்டின் பிரதியை தொலைத் தொடர்பாடல் ஆணைக்குழுவுக்கு எடுத்துச்செல்லும் தேவை இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முறைப்பாட்டை மேற்கொண்ட வேளையிலிருந்து தொலைத்தொடர்பாடல் ஆணைக்குழுவின் ஊடாக குறித்த தொலைபேசி பயன்படுத்தப்பட்ட தொலைபேசி நிறுவனத்துடன் (Mobitel, Dialog, Airtel, Etisalat, Hutch) இணைந்து மேற்கொள்ளப்படும் விசாரணை நடவடிக்கைகளை அதன் இறுதிவரை கணனி வலையமைப்பின் ஊடாக இற்றைப்படுத்தப்படும் (Update) .

இதன் காரணமாக, முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டின் நிலை தொடர்பில் உடனடியாக அறிந்து கொள்ள முடியும்.

அத்துடன் எவரேனும் ஒருவர் கையடக்க தொலைபேசியொன்றை கொள்வனவு செய்யும்போது குறித்த தொலைபேசி போலியானதா என்பது தொடர்பில் குறித்த கணினி வலையமைப்பின் ஊடாக பரீட்சிப்பதற்கான வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் சுமார் 24 மில்லியன் கையடக்க தொலைபேசிகள் பாவனையில் உள்ளதோடு அவற்றில் காணாமல் போன அல்லது களவாடப்பட்டதாக நாடு முழுவதிலும் உள்ள பொலிஸ் நிலையங்களில் நாளொன்றுக்கு 800 தொடக்கம் 1,000 முறைப்பாடுகள் கிடைக்க பெறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.


Add new comment

Or log in with...