இரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு | தினகரன்


இரத்தினவேலோனின் ‘புலவொலி’ சரஸ்வதி மண்டபத்தில் வெளியீடு

புலோலியூர் ஆ. இரத்தினவேலோன் எழுதிய புலவொலி நூல் வெளியீட்டு விழா பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் சாகித்தியரத்னா தெளிவத்தை ஜோசப்பின் தலைமையில் நடைபெற்றது.

இந்து வித்தியா சங்கத் தலைவர்  வே.கந்தசாமி,   ஞானம் தி. ஞானசேகரன்.  மூத்த பத்திரிகையாளா் வீ.தனபாலசிங்கம் ஆகியோரின் ஆசியுரையுடன்  கேசவன் வெளியீட்டுரையை நிகழ்த்த நூல் நயவுரையை டாக்டா் ச.முருகானந்தன், ராணி சீதா ஆகியோர் நிகழ்த்தினார்கள்.

ஈழத்து இலக்கிய உலகில் எழுத்தாளராக  18வயதில்  தனது முதலாவது சிறுகதையை தினகரனில் வெளியிட்ட இரத்தினவேலோன் தற்பொழுது 60வயதை தாண்டியும் எழுத்தினை நேசித்து தொடா்ந்து எழுதி வருகின்றார். உன்னத ஆளுமை மிக்கவர்.

சிறந்த பல சிறுகதைகளை ஈழத்து இலக்கியத்திற்கு வழங்கியுள்ளதோடு மீரா பதிப்பகத்தின் ஊடாக இவர் இதுவரையில் 104நுால்களை பதிப்பித்து வெளியிட்டு எழுத்தாளர்களை ஊக்குவித்துள்ளார்.

ஈழத்து எழுத்தாளர்களது படைப்புக்களை தனது பத்தி எழுத்துக்களின் ஊடாக  வெளியுலகிற்கு கொண்டு வந்துள்ளார். இவர் தமது பெயருக்கு முன்னாள் தமது தாய் மண்ணின் பெயரை இணைத்துக் கொண்டு  ஊருக்குப் பெருமை தேடித் தந்துள்ளார்.

 இவர் போன்று மேலும் பலர் சொந்த ஊரின் பெயரினை முன்னிலைப்படுத்தி எழுதி வருகின்றனர்.

 தாம் எங்கு வாழ்ந்தாலும் தாம் பிறந்த மண்னை நேசிக்கும் எழுத்தாளா் அவர் .

புலோலியூர் எழுதிய  சிறுகதைகளான  அறிமுக விழா, புதிய பயணம், விடியட்டும் பார்ப்போம், நிலாக்காலம், நெஞ்சாங்கூட்டு நினைவுகள், காவியமாய் ..நெஞ்சில் ஓவியமாய்...,  பத்தி  எழுத்துக்கள்  புதிய சகத்திரப் புலா்வின் முன் ஈழத்துச் சிறுகதைகள், அண்மைக்கால அறுவடைகள், புலவொலி,  தோ்ந்தெடுத்த தொகுதிகளான - விடியலுக்கு முன் சிறுகதைகள், திக்கற்றவா்கள் சிறுகதை, இருபதாம் நுாற்றாண்டில் ஈழத்துச் சிறுகதைகள் ஆகியன புலோலியூர் எழுதிய  சிறுகதைகளாகும். 

தினகரன், தினக்குரல். வீரகேசரி உட்பட உள்நாட்டு வெளிநாட்டு சஞ்சிகைகளில் நுாற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் கட்டுரைகளை அவர் எழுதி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

நூலின் முதற் பிரதியை  திருமதி அபிராமி கயிலாசபிள்ளை நுாலாசிரியர் ஆ.இரத்தினவேலோனிடமிருந்து பெற்றுக் கொண்டார்.  

தகவல், படங்கள்
அஸ்ரப் ஏ சமத்                                                 

                


Add new comment

Or log in with...