Home » கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாடு

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மாநாடு

by damith
January 29, 2024 12:57 pm 0 comment

இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையம் மற்றும் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் மற்றும் இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த ‘நாளைய சவால்களுக்கான நிலைத்திருக்கும் தன்மை, புத்தாக்கம், இடைநிலை ஆராய்ச்சி’ என்ற தலைப்பிலான சர்வதேச மாநாடு கிழக்குப் பல்கலைக்கழக நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.

கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் ஆரம்ப உரையாற்றிய இம்மாநாட்டில், தேசிய விஞ்ஞான மன்றத்தின் தலைவரும் றுகுணு பல்கலைக்கழக பயிர் விஞ்ஞானத்துறையைச் சேர்ந்த வாழ்நாள் பேராசியருமான ரஞ்சித் சேனாரத்ன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

பிரதம அதிதி தனது உரையின்போது, “நாட்டின் பிரச்சினைகளுக்கு அறிவியல் மூலம் தீர்வு காணப்படும். எனவே, தேசிய விஞ்ஞான மன்றமும், இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கமும் பல்துறை துறையில் உள்ள கல்வியாளர்களுடன் கைகோர்த்து அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்குத் தயாராக உள்ளன” என்று குறிப்பிட்டார்.

கிழக்குப் பல்கலைக்கழக பேராசிரியர் ஏ.ஜி.ஜோன்பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், இந்தியாவின் ஈ.எஸ்.என் பதிப்பகத்தின் நிறுவுனரும் அதன் தவிசாளருமான கலாநிதி ஜே.பானுசந்தர், மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் திருமதி. ஜே.ஜே.முரளிதரன் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

மாநாட்டின் முக்கிய பேச்சாளர்களாக தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உதவிப் பேராசியர் கலாநிதி வி. சர்மிளா நிகழ்வில் கலந்து கொண்டதுடன், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இயற்கை மருத்துவ நிபுணரும் ஊட்டச்சத்து தொடர்பான அறிவுரையாளருமான வைத்தியர் நித்தி கனரத்னம் நிகழ்நிலை ஊடாகக் கலந்து கொண்டு உரையாற்றினார். அத்துடன் நிகழ்வின் பங்காளரான தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக பதிவாளர் பேராசிரியர் நாகா சுப்ரமணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இம்மாநாட்டுக்காக இலங்கை, இந்தியா, நேபாளம் ஆகிய நாடுகளில் இருந்து 162 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்துடன், அவற்றில் 138 கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாநாட்டு குழு செயலாளரும், பல்துறை ஆராய்ச்சிக்கான நிலையப் பணிப்பாளருமான கலாநிதி பி.ரொட்னி பெர்னாண்டோ நிகழ்வுகளை நெறிப்படுத்தியிருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT