Friday, April 19, 2024
Home » மானுடவியல்

மானுடவியல்

by damith
January 29, 2024 10:01 am 0 comment

அங்ஙனஞ் செய்த தபோபலம்பற்றி, தோணியப்பருடைய பெருங்கருணையினாலே, உலகமெல்லாம் உய்யும்படி, பகவதியாருடைய அருமைத் திருவயிற்றிலே, கர்ப்போற்பத்தியாகிய பெரும்பேறு உளதாயிற்று. சிவபாதவிருதயர் அதனை உணர்ந்து, திருவருளைத் துதித்து, மூளுகின்ற மகிழ்ச்சியோடு, தங்கள் வேதவிதிப்படி செய்ய வேண்டுஞ் சடங்குகளைப் பத்துமாசங்களினும் சுற்றத்தார்களோடு சிறக்கச் செய்து, பேரின்பத்தை நுகரு நாளிலே, சூரியன் முதலிய கிரகங்கள் உச்சங்களிலே மிக்கவலியுடன் நிற்க, திவ்வியலக்கினம் எழ, திருவாதிரை நக்ஷத்திரத்திலே, பரசமயத்தருக்கு நீங்கவும், வைதிகமார்க்கமும் சைவமார்க்கமுந் தழைத்தோங்கவும், பிராமணர்களுடைய ஆகுதிகள் பெருகவும், எம்மொழிகளினுந் தமிழ்மொழியே உயர்ச்சியடையவும், பலவுலகங்களுள்ளும் பூலோகமும் அப்பூலோகத்திலுள்ள பலநாடுகளுள்ளுந் தமிழ் நாடுமே சிறக்கவும், பிள்ளையார் திருவவதாரஞ் செய்தருளினார். அவருக்குச் சாதகருமம், நாமகரணம், அன்னப் பிராசனம், சௌளம் என்கிற கருமங்கள் உரிய காலங்களிலே மிகுந்த சிறப்போடு செய்யப்பட்டன.

பிள்ளையார், மூன்றாம் ஆண்டிலே, தம்முடைய தந்தையாராகிய சிவபெருமான் தம்மைச் சிவபாதவிருதயருக்குப் புத்திரராகக் கொடுக்க அவரைப் பிரிந்தமையால், ஓரோர்கால் அப்பிரிவு உள்ளத்திற்றோன்ற வெருக்கொண்டாற் போலக் குறிப்பயிலாய் அழுவர். இங்ஙன நிகழுநாளிலே வேறொரு நாள் தந்தையாராகிய சிவபாதவிருதயர் ஸ்நானம் பண்ணுதற்குப்போம் பொழுது, பிள்ளையார், பரமசிவனுடைய திருவருள் கூட, அவரைத் தொடர்ந்து அழுதுகொண்டு பின் சென்றார். பின்சென்ற பிள்ளையாரைத் தந்தையார் திரும்பிப் பார்த்து, கோபமுடையவர் போல விலக்குதலும் பிள்ளையார் கால்கொட்டி மீளாராக தந்தையார் “உன் செய்கை இதுவாயில் வா” என்று, கொண்டு சென்று, ஆலயத்தினுள்ளிருக்கின்ற தீர்த்தத்தை அடைந்து. அப்பிள்ளையாரைக் கரையிலே வைத்துவிட்டு, தாந்தீர்த்தத்தினுள்ளே இறங்கி நின்றுகொண்டு சங்கற்பம் அகமருஷண சூக்தபடன முதலியன செய்தார்.

(தொடரும்)

கலாநிதி சிவ கு.வை.க. வைத்தீஸ்வர குருக்கள் தலைவர், இந்துக் குருமார் அமைப்பு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT