ஐ.தே.க. கூட்டணி தொடர்பில் நாளைய கூட்டத்தில் முடிவு | தினகரன்

ஐ.தே.க. கூட்டணி தொடர்பில் நாளைய கூட்டத்தில் முடிவு

ஜனநாயக தேசிய முன்னணி எனும் கூட்டணியை அமைப்பதில் காணப்பட்ட குறைபாடுகள் களையப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும், பெற்றோலிய வள, நெடுஞ்சாலைகள் வீதி அபிவிருத்தி அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார். நாளைய தினம் இடம்பெறும் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பில் உடன்படிக்கை செய்வது தொடர்பில் திகதி தீர்மானிக்கப்படுமெனவும் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராகவே இருப்பார்.மக்கள் தீர்ப்புக்கு மதிப்பளிக்கும், மக்கள் எதிர்பார்க்கும் ஒருவரே வேட்பாளராக நிறுத்தப்படுவாரென்றும் அவர் குறிப்பிட்டார்.

நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி மற்றும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:

ஐ.தே.க மற்றும் ஐ.தே.மு தலைவர்களுக்கு இடையில் நாளை (17) சனிக்கிழமை விசேட பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது. இதன்போது ஜனநாயக தேசிய முன்னணியை அமைப்பது தொடர்பில் இறுதி முடிவுகள் எட்டப்படவுள்ளன. கட்சியின் யாப்பை மறுசீரமைப்பது தொடர்பில் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. கட்சியின் பிரதித் தலைவர் சஜித்பிரேமதாசா மற்றும் அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்கு இடையில் இது தொடர்பில் பேச்சுவார்தையொன்றும் இடம்பெற்றது. சஜித் பிரேமதாஸவும் யாப்பில் மாற்றம் செய்ய உடன்பட்டுள்ளார்.

நாளைய தினம் நடைபெறவுள்ள கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் மற்றும் கூட்டணி உடன்படிக்கையை கைச்சாத்திடும் தினம் என்பன தீர்மானிக்கப்படவுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் 74ஆவது தேசிய மாநாடு எதிர்வரும் செப்டெம்பர்மாதம் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னர் எமது கட்சியின் வேட்பாளர் யாரென அறிவிப்போம்.

எவ்வாறெனினும் எமது ஜனாதிபதி வேட்பாளர் நிச்சயம் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்தவராகவே இருப்பார். இந்த முடிவை கட்சி உயர் மட்டம் அடுத்த இரண்டொரு தினங்களில் கூடித் தீர்மானிக்கும். கூட்டணி உடன்படிக்கை செய்யும் நாளன்றே எமது வேட்பாளர் யாரென்பதையும் பகிரங்கப்படுத்துவோம் என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...