இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சி தீவிரம் | தினகரன்


இந்திய அணியின் பயிற்சியாளரை தேர்வு செய்யும் முயற்சி தீவிரம்

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக யார் நியமிக்கப்படுவார் என தீவிர எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தற்போது தலைமை பயிற்சியாளராக உள்ள ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் கடந்த உலகக் கிண்ணத்துடன் முடிவுற்றது. எனினும் மே.இ.தீவுகள் தொடர் நடந்து வருவதால், ரவிசாஸ்திரி மற்றும் துடுப்பாட்ட, பந்துவீச்சு, களத்தடுப்பு பயிற்சியாளர்களுக்கு 45 நாட்கள் நீட்டிப்பு தரப்பட்டுள்ளது.

புதிய தலைமை பயிற்சியாளர், இதர பயிற்சியாளர்களை நியமிக்க இந்திய கிரிக்கெட் சபை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. இதற்கு விண்ணப்பிக்க ஜூலை 30 ஆம் திகதி இறுதி நாளாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கபில்தேவ், முன்னாள் பயிற்சியாளர் அன்ஜுமன் கெய்க்வாட், மகளிரணி முன்னாள் தலைவி சாந்தா ஆகியோர் கொண்ட குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. இதற்கான நேர்காணல் வரும் 16, 17 ஆம் திகதிகளில் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.

ரவிசாஸ்திரி நேர்காணலில் நேரடியாக கலந்து கொள்ள வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து லால்சந்த் ராஜ்புத், ரொபின் சிங், வெளிநாட்டைச் சேர்ந்த டொம் மூடி (ஆஸி.), மைக் ஹெஸ்ஸன் (நியூசி.), பில் சிம்மன்ஸ் (மே.இ,தீவுகள்) ஆகியோர் இதற்கு விண்ணப்பித்துள்ளனர்.


Add new comment

Or log in with...