மரபுரிமையின் புனித பூமியாக மடுத்திருப்பதி | தினகரன்


மரபுரிமையின் புனித பூமியாக மடுத்திருப்பதி

இலங்கை வாழ் மக்கள் மத்தியில் மடுத் திருப்பதியானது இன, மத பேதங்களைக் கடந்த பிரசித்தி பெற்ற தலமாக திகழ்கின்றது. இது அதன் வரலாற்று பின்னணியாலும் முக்கியத்துவத்தாலும் ஒரு தேசிய மரபுரிமையின் புனித ஸ்தலமாக கருதப்படுகின்றது. ஆனால், கத்தோலிக்கராகிய எமக்கோ நம் விசுவாசத்திற்கும், செப வாழ்விற்கும், புதுப்பித்தலுக்கும் உரிய சக்தி மையமாக இருக்கின்றது. வருடா வருடம் கத்தோலிக்கரும் அன்னையினூடாக தாங்கள் பெற்ற உபகாரங்களுக்காக ஆணடவருக்கு நன்றி கூறவும், தங்கள் பொருத்தனைகளை செலுத்தவும், திருவிழாத்திருப்பலியில் பங்கெடுக்க ஒன்றுகூடும் காட்சியானது இந்த இடத்தின் மகிமை அளப்பரியது என்பதைக் காட்டுகின்றது.  

திருவிழாக்காலங்களில் மட்டுமல்லாது ஏனைய நாட்களிலும் மக்கள் யாத்திரிகர்களாக வந்து மடுத்திருப்பதியை தரிசித்து, ஜெபித்துச் செல்லுவது கண்கூடாகக் காணும் வியக்கவைக்கும் நிகழ்வாகும் இலங்கை வாழ் மக்கள் மட்டுமல்லாது உலகளாவிய கத்தோலிக்க சமூகம்கூட அற்புதமான இந்தத் திருப்பதியின் முக்கியத்துவத்தை அறிந்திருக்கிறது.  

நிகழ்காலத்தின் தலைமுறையினராகிய நம்மிடம் “நீங்கள் ஏன் இந்தத் திருத்தலத்திற்கு யாத்திரிகர்களாக வருகின்றீர்கள்? என்று கேட்கப்பட்டபோது “எங்கள் பாட்டன் பாட்டி தலைமுறையினர் வந்தார்கள். இப்போது எங்கள் பெற்றோர்கள் வருகின்றார்கள் இது ஒரு புனித பூமியாக இருப்பதனால் நாங்கள் இங்கு வரும்போது அமைதியையும், நிம்மதியையும் அனுபவிக்கின்றோம்” என்று பதில் அமைந்தது. இன்னும் ஒரு படி மேலே சென்று “எப்படி இத்திருத்தலம் இந்தக்காட்டினுள் அமைந்தது? இதன் முன்னோடி யார்? என கேட்டபோது, பதில் ஒல்லாந்தர் காலத்தைக் கூறி பாதி உண்மையைக் கொண்டதாகவும் கேட்ட கேள்விக்கு ஆதாரமற்ற பதிலும் 1968ஆம் ஆண்டு வட பகுதியில் வாழ்ந்த காத்தோலிக்க மக்களுக்கு இருண்ட யுகத்தை கொணர்ந்தது. மன்னார் யாழ்ப்பாண பகுதிகள் ஒல்லாந்தர் வசமாகின. மறைபரப்புப் பணியாளர்கள் பலவந்தமாக நாட்டைவிட்டு அனுப்பப்பட்டனர்.  

பல இறை ஊழியர்களும், மக்களும் விசுவாசத்துக்காய் மரித்தனர். கத்தோலிக்கர்கள் புரட்டஸ்தாந்து கொள்கைகளை ஏற்குமாறு வற்புறுத்தப்பட்டனர். பாடசாலைகள், ஆலயங்கள், பணித்தளங்கள் என்பன ஒல்லாந்தர்களால் அபகரிக்கப்பட்டன. பல அழிக்கப்பட்டன. அருட்பணி அன்ரசைனஸ் அ.ம.தி, அவர்கள் இதைப்பற்றி கூறுகையில், பாரம்பரியத்தின்படி ஒல்லாந்தர்களால் மறைபணிபாளர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டபோது சில பிரன்சிஸ்கன் குருக்கள் தமது மந்தைகளோடு தங்கி அவர்களை பாதுகாக்க முடிவெடுத்தனர். ஏனென்றால் தங்களால் உருவாக்கப்பட்டவர்களது விசுவாசம் ஆபத்தை சந்திக்கையில் அவர்களை விட்டு ஓடுவது ஆயனுக்கு அழகில்லை (யோவா 10:10-11) இதேவேளை, மறுபக்கம் மாதொட்டப்பகுதியில் இருந்து தங்கள் விசுவாசத்தைப் பாதுகாக்கும் பொருட்டு கத்தோலிக்கர்கள் தீவுப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து மடுவை அடைந்தனர்.  

யாழ்ப்பாணத்தில் நிலைமை தொடர்ந்தும் மோசமடைய அங்கிருந்த 700கத்தோலிக்கர்கள் 7பிரன்சிஸ்கன் குருக்களோடு கடலேரியைக் கடந்து பூநகரியில் பிரன்சிஸ்கன் ஏற்கனவே, கட்டியிருந்த ஆலயத்தில் தங்கி பின்பு பனங்காமம் நோக்கி நகர்ந்து அங்கேயும் பிரான்சிஸ்கன் குருக்கள் கட்டியிருந்த கோவிலில் தங்கியிருந்தனர். இறுதியாக மடு வனத்தை அடைந்து அங்கே தங்கள் மந்தைகளாகிய மாதோட்ட கிறிஸ்தவர்களோடு சேர்ந்து ஒன்றாகினர். சூழவும் ஆபத்து இருந்தபடியால் வெளித்தொடர்பினை இழந்த நிலையில் இந்த துறவிகள் மக்களுக்காக தங்களையே அர்ப்பணித்துள்ளனர். ஆலயம் அமைத்து வழிபாடுகள் நடாத்தி, திருப்பலியை நிறைவேற்றி மக்களுக்கு ஆறுதல் அளித்து ஈற்றிலே தங்கள் உடலையும் உயிரையும் கொடுத்து இந்தத் திருத்தலத்திற்கு உயிர்கொடுத்ததெழுப்பினர். இறைமக்களும் இவர்கள் மிகவும் அன்பு செய்த படியால் தாங்கள் இறந்தபின் இந்த இடத்திற்கு புனிதம் சேர்க்கும் வகையில் ஆலயத்தில் சுத்தம் செய்தனர். இதுதான் அப்போது எழுத்தில் எழுதப்படாமல் மக்கள் மனங்களில் எழுதப்பட்ட உண்மைகதையின் புதைக்கப்பட்ட சரித்திரம்.  

இலங்கை திருச்சபையின் வரலாற்றில் புனித பிரான்ஸிஸ் அசிசியாரின் வழிவந்த புனித பிரான்ஸிஸ்கன் சபையினரே நமது தாயகத்தின் மறைபரப்பின் முன்னோடிகளாவர்.மறை பரப்பும் நோக்கில்1543ம் ஆண்டு பிரான்ஸிஸ்கன் சபையினர் கோட்டே இராச்சியத்தில் காலடி பதித்தனர். மறைபரப்பு விரிவாக்கலின் விளைவாக 1560ம் ஆண்டு மன்னார் யாழ்ப்பாண பிரதேசங்களில் இவர்கள் தங்கள் பணியினை பல கஸ்டங்களுக்கு மத்தியில் தொடர்ந்தனர். யாழ்ப்பாணத்தில் அதிகமாக எல்லா இடங்களிலும் கிறிஸ்தவ சமுகங்களை உருவாக்கி 25ஆலயங்கள் அமைத்து பணிபுரிந்தனர். இதே வேளை மன்னார் பகுதியிலே தீவின் சில இடங்களிலும், பெருநிலப்பரப்பில் அரிப்புத்துறை, நானாட்டான், மாதோட்டம், விடத்தல்தீவு, மற்றும் சேத்துவெளி ஆகிய பகுதிகளில் மக்களுக்கு போதித்து, கிஙிஸ்தவ சமூகங்கள் அமைத்து ஆலயங்கள் எழுப்பினர். இதன் பயனாக மன்னார் பகுதியில் விசுவாச சாட்சிய வாழ்வு வேரூன்றி தளைத்தோங்கியது. தற்போது நமது ஆய்வுக்காக மாதோட்டத்தை தனியாக்குவோம். வடக்கே யாழ்ப்பாணத்தையும் மேற்கே மன்னார் கரையோரத்தையும் கொண்டு மத்திய காட்டுப்பகுதி வன்னிக்கு செல்வோம்.  

அருட்பணி ஜாக்வேட், ஆயர் பொன்ஜீன் அவர்களைப் பற்றி எழுதியதில் மடுத்திப்பதியில் வரலாற்றைப் பற்றி ஒரு பகுதியில், “எமது உள்ள+ர் பாரம்பரியத்தின்படி, மடுத்திருப்பதியில் எமது விசுவாசத்தைப் போதிக்கும் உன்னத பரிசுத்த தனத்தைக் கொண்ட ஏழு குருக்கள் இந்த அன்னையின் திருப்பதியில் வந்து வசித்தனர். அதேவேளை, மக்களுக்கு இவர்கள் திருப்பலியினை நிறைவேற்றி, திருவருட்சாதனங்களை அளித்தனர். அதாவது, வேத கலாபனையின்போது மடுப்பதிக்கு அடைக்கலம் தேடிவந்த மக்களுக்கு இவர்கள் தங்கள் திருப்பணிகள் மூலம் ஆறுதல் அளித்தனர். இறைபராமரிப்பு அவர்களை வழிகாட்டிக் கொண்டுவந்த இந்த இடத்திலேயே அவர்கள் மரித்தனர். விண்ணகக் கொடைகளாலும், புண்ணியங்களாலும் நிறைக்கப்பட்டவர்களாய் அவர்கள் பட்ட துன்பங்களுக்கும் அர்ப்பணிப்பு நிறைந்த பணிக்கும் சான்று பகிரும் விதத்தில் இந்த ஆலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டனர். 

அருட்சகோதரர்
றீகன் லோகு


Add new comment

Or log in with...