Thursday, March 28, 2024
Home » தை அமாவாசை

தை அமாவாசை

by damith
January 29, 2024 6:00 am 0 comment

தை அமாவாசை தினத்தில் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால், அவர்களின் அருளாசியால் எண்ணற்ற நன்மைகள் ஏற்படும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக்கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும்.

அமாவாசை அன்று நம்முடைய முன்னோர்களின் ஆத்ம சாந்திக்காக செய்யப்படும் திதி, தர்ப்பண பூஜையானது, நம்முடைய வம்சாவழியினருக்கு பெரிதும் நலம் தரும். தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு தரப்படுவதாகும். இந்த தர்ப்பண நீரின் சக்தியானது, பூமியின் ஆகர்ஷன சக்தியை மீறி, மேல்நோக்கி எழும்பிச் சென்று, பல கோடி மைல்களுக்கு தொலைவில் உள்ள பித்ரு லோகத்தை அடையும். தை அமாவாசையன்று, இந்த சக்தியானது மிகவும் அபரிமிதமாக பெருகுகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பவர்களின் வீட்டில் காரியத் தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

அமாவாசையன்று தீர்த்தக்கரைகளில் நீராடும் போது, பிதுர்காரகராகிய சூரியனுக்கு இரு கைகளாலும் நீர் விடும் அர்க்கியம் செய்வது மிகுந்த நன்மை தரும். கடல் அல்லது புண்ணிய நதிகளில் நீராடியவுடன் முழங்கால் அளவு நீரில் நின்றுகொண்டு, சூரியனை நோக்கி மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் சூரியனின் அருளையும் பூரணமாக பெறலாம். முன்னோர்களுக்கு மூன்று கை தண்ணீர் என்று சொல்வார்கள். அவர்களுக்கு செய்யும் தர்ப்பண பலன்களை நம்மிடம் இருந்து பெற்று பிதுர் தேவதைகளிடம் சூரியன் வழங்குகிறார். அந்த தேவதைகள் மறைந்த முன்னோரிடம் பலன்களை சேர்க்கின்றன என்பது ஐதீகம்.

சனி அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல ஏழைகளுக்கு தானம் அளிப்பதும் சிறப்பானது. கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், உடைகள், பார்லி ஆகியவை நாம் தானம் அளித்தால் மிகவும் நல்லது. இதனால் நம் முன்னோர்களின் ஆசி கிடைக்கும். தானத்தில் சிறந்த தானம் அன்ன தானம் என்பார்கள். அதே போல் தண்ணீர் தானமும் சிறப்பானது. தேவையான மக்களுக்குத் தண்ணீர் தானம் கொடுப்பது, குடிக்க இனிப்பு கலந்த தண்ணீர் கொடுப்பது மிகவும் சிறந்தது.

பொதுவாக அமாவாசை தினத்தில் நம்முடைய வீடுகளை சுத்தம் செய்து முன்னோர் வழிபாடு செய்வது வழக்கம். அன்றைய தினம் வாசலில் கோலம் போடக்கூடாது. சண்டை சச்சரவு எதுவும் செய்யக்கூடாது. ஏழைகளையும் தூய்மை பணி செய்பவர்களை அவமானப்படுத்தக்கூடாது என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. நமது மூததையர்கள், முன்னோர்களை நாம் எப்போதும் மறக்க கூடாது.

தாத்தா, கொள்ளுத்தாத்தா, எள்ளுத்தாத்தா, பாட்டன் பூட்டன் என பல தலைமுறையினரை பெயரை நினைவில் வைத்து நாம் தர்ப்பணம் தரவேண்டும். அரிசி, பருப்பு, காய்கறிகள் குறிப்பாக வாழைக்காய், குடை, வஸ்திரங்கள், காலணி உள்பட பல பொருட்களை சக்திக்கு ஏற்ப தானம் கொடுக்க வேண்டும். வருங்கால சந்ததியினருக்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் ஏற்படும் நன்மைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்முடைய முன்னோர்களுக்கு அளிக்கும் தர்ப்பணத்தின் மூலம் நமக்கு ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும் சுப காரியங்கள் நடைபெறும். மன குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT