தேர்தல் வழக்குகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் அவசியம் | தினகரன்


தேர்தல் வழக்குகளை விசாரிக்க விசேட நீதிமன்றம் அவசியம்

தேர்தல் சட்டமூலத்தை சபையில் நிறைவேற்றுமாறு சகல கட்சிகளுக்கும் பெப்ரல் அழைப்பு

தேர்தல் விதிமுறைகள் தொடர்பில் பெப்ரல் அமைப்பும் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தயாரித்துள்ள சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றுவதற்காக அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டுமென பெப்ரல் அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. 

 அத்துடன், தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகனை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள காலதாமதம் ஏற்படுவதுடன், நீண்டகாலத்திற்கு அவை ஒத்தி வைக்கப் படுகின்றன. எனவே  தேர்தல்கள் தொடர்பிலான வழக்குகள், முறைப்பாடுகளை விசாரணை செய்ய, விசேட நீதிமன்றம் உருவாக்கப்பட வேண்டுமென வும் பெப்ரல் அமைப்பு தெரிவித்தது.    மருதானை சீ.எஸ்.ஆர்.மண்டபத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே, பெப்ரல் அமைப்பின் தேசிய அமைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.  

 அவர் மேலும் தெரிவித்ததாவது, 

 மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக சில அரசியல் கட்சிகளும், தலைவர்களும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். மாகாண சபைத் தேர்தலை நடத்த எவ்வித முயற்சிகளும் எடுக்காத அரசியல் கட்சிகளே இவ்வாறு குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றன.

தேர்தல் சட்டங்களை தேவைக்கேற்ப வளைக்க முடியாது. எட்டு மாகாண சபைகளின் ஆயுட்காலம் கடந்த ஓரிரண்டு வருடங்களுக்கு முன்னரே முடிவடைந்துவிட்டன. ஊவா மாகாண சபை மாத்திரமே அடுத்த மாதம் 8ஆம் திகதியுடன் கலைகிறது.

பெப்ரல் அமைப்பும், தேர்தல்கள் ஆணைக்குழுவும் மாகாண சபைத் தேர்தலை நடத்த முயற்சிகளை எடுத்து வருகிறது.

மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு உயர்நீதிமன்றம் உட்பட பல நீதிமன்றங்களில் மனுக்களை தாக்கல் செய்தோம். ஆனால், அவை முக்கியத்துவமளிக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லை. நீண்டகாலத்திற்கு அவை ஒத்திவைக்கப்படுகின்றன. ஒவ்வொரு தேர்தல்களும், ஆட்சியில் இருக்கும் கட்சிகளுக்கு ஏற்ப மாற்றப்படுகின்றன. அவ்வாறு முடியாது. இதற்கென தனியான சட்டமுறைமை அவசியம். தேர்தல்கள் தொடர்பில் விசேட நீதிமன்றமொன்று அமைக்கப்பட வேண்டும்.

தேர்தல் விதிமுறைகள் மற்றும் தேர்தல்களை நடத்துவது, பிரச்சாரங்களை முன்னெடுப்பது, நிதியை செலவிடுவதுதொடர்பில் பல காரணிகளை உள்ளடக்கிய கடந்த காலத்தில் சட்டமொன்றை பெப்ரல் அமைப்பு தயாரித்திருந்தது. இதற்கு அமைச்சரவையும் அனுமதியளித்துள்ளது. தற்போது சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் இச்சட்டமூலம் உள்ளது. விரைவில் இதனை பாராளுமன்றில் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் கருத்தை ஜனாதிபதி கோரியுள்ளார். எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் இதற்கு சிறந்ததொரு தீர்ப்பை உயர்நீதிமன்றம் வழங்குமென எதிர்ப்பார்க்கின்றோம்.

தேர்தல்களுக்காக பாரிய நிதி செலவிடப்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்காக கடந்த 2005ஆம் ஆண்டு 715மில்லியனும், 2010ஆம் ஆண்டு 1850மில்லியனும், 2015ஆம் ஆண்டு 2,706மில்லியனும் தேர்தல்கள் ஆணைக்குழுவால் செலவிடப்பட்டுள்ளன.

2019ஆம் ஆண்டில் 4,000ம் மில்லியன் செலவாகுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்நிதிகள் எமது நாட்டின் அபிவிருத்திக்கு பயன்படுத்தக் கூடியவையாகும்.

சுப்பிரமணியம் நிஷாந்தன் 


Add new comment

Or log in with...