‘ஜனநாயக தேசிய முன்னணி’ இறுதி முடிவு சனிக்கிழமை | தினகரன்


‘ஜனநாயக தேசிய முன்னணி’ இறுதி முடிவு சனிக்கிழமை

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையில் உருவாக்கப்படவுள்ள ‘ஜனநாயக தேசிய முன்னணி’ தொடர்பில் இறுதி முடிவு எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள பங்காளிக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படவுள்ளது. 

அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் காலிமுகத்திடலில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தி ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைக்கவும், உடன்படிக்கையை கைச்சாத்திடவும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை இரவு ஐ.தே.முவின் கட்சித் தலைவர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்றது. இதன்போதே மேற்கண்டவாறு கலந்தாலோசிக்கப்பட்டது.

ஐ.தே.க. தலைமையில் உருவாக்கப்படும் ‘ஜனநாயக தேசிய முன்னணி’ தொடர்பில் இழுபறி நிலை கடந்த ஒரு மாதகாலமாக தொடர்ந்துவந்தது. குறித்த கூட்டணியில் அமைக்கப்படவுள்ள தலைமைத்து சபையில் ஐ.தே.கவுக்கு அதிக பெரும்பான்மை அவசியம். மற்றும் கூட்டணியின் பொதுச் செயலாளராக ஐ.தே.கவை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட வேண்டுமென பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.

அத்துடன், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக அக்கட்சியின் பிரதி தலைவரும், அமைச்சருமான சஜித் பிரேமதாஸவே நியமிக்கப்பட வேண்டுமென ஐ.தே.கவின் ஒருதரப்பு கட்சியின் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துவருகிறது. சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்கும் வகையில் பதுளையில் பிரமாண்ட கூட்டமொன்றும் நடத்தப்பட்டதால்,அவரே ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டுமென கட்சிக்குள் ஆதரவும் வலுப்பெற்றுள்ளது.

இவ்வாறான பின்புலத்திலேயே நேற்றுமுன்தினம் பிரதமர் தலைமையில் ஐ.தே.முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் முக்கிய கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இக்கூட்டத்தில் எதிர்வரும் சனிக்கிழமை 17ஆம் திகதி கூட்டணிப் பேச்சுகளை இறுதிப்படுத்தி உடன்படிக்கையை கைச்சாத்திடும் தினத்தை முடிவுசெய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று வடக்கிற்கு மூன்றுநாள் பயணம் மேற்கொண்ட பிரதமர் வெள்ளிக்கிழமை இரவு கொழும்பு திரும்பவுள்ளார். வெள்ளிக்கிழமை இரவு கூட்டணி மற்றும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுடன் முக்கிய பேச்சுகளை நடத்தவுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் 23ஆம் திகதி மாத்தறையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு விசேட வரவேற்புக் கூட்டமொன்றை அமைச்சர் மங்கள சமரவீர ஏற்பாடு செய்துள்ளார். மாத்தறை கூட்டத்திற்கு ஐ.தே.க. ஆதரவாளர்களை வருமாறு அமைச்சர் மங்கள சரவீர அழைப்புவிடுத்துள்ளார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...