Home » இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் காசாவுக்கான உதவியை பல நாடுகளும் நிறுத்தியதற்கு கண்டனம்

இஸ்ரேலின் தாக்குதலுக்கு மத்தியில் காசாவுக்கான உதவியை பல நாடுகளும் நிறுத்தியதற்கு கண்டனம்

பலஸ்தீனர்களின் மனிதாபிமான அவலம் உச்சம்

by damith
January 29, 2024 7:34 am 0 comment

காசாவின் கான் யூனிஸ் நகரில் தொடர்ந்து இஸ்ரேல் உக்கிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பலஸ்தீன மக்கள் மேலும் தெற்காக இடம்பெயர்ந்து வருவதோடு பலஸ்தீன அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்திற்கான நிதியை பல மேற்குலக நாடுகளும் இடைநிறுத்தி இருப்பது ஏற்கனவே மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் பலஸ்தீனர்களை மேலும் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலில் 30,000 பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவன ஊழியர்களில் 12 பேர் தொடர்புபட்டிருப்பதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியதை அடுத்து அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட பல மேற்குல நாடுகள் அந்த நிறுவனத்திற்கான நிதியை இடைநிறுத்தியுள்ளன.

இதில் ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, பின்லாந்து, அவுஸ்திரேலியா, கனடா ஆகிய நாடுகளும் அடங்குகின்றன.

இந்நிலையில் ‘காசாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கு இந்த மேலதிக கூட்டுத் தண்டனை தேவையில்லை’ என்று பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் விசாரணை நடத்தி வருவதாகவும் இதனுடன் தொடர்புபட்டவர்கள் ஏற்கனவே பதவி நீக்கப்பட்டு விட்டதாகவும் அந்த ஐ.நா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனத்திற்கான மேலும் நன்கொடை நாடுகள் தமது நன்கொடைகளை இடைநிறுத்த வலியுறுத்திய இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் காட்ஸ், காசாவில் சண்டை முடிந்ததும் இந்த ஐ.நா நிறுவனம் மாற்றப்பட வேண்டும் என்றும் அது காசாவில் ஹமாஸ் அமைப்புடன் தொடர்புபட்டிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

காட்ஸின் இந்த கருத்துப் பற்றி ஐ.நா பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம் கேட்டபோது, “ கருத்துகளுக்கு எம்மால் பதில் கூற முடியாது. பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவன வலுவான பதிவை கொண்டிருப்பதோடு அதனை நாம் தொடர்ச்சியாக கோடிட்டுக்காட்டுகிறோம்’ என்றார்.

இந்த பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் உட்பட பல்வேறு ஐ.நா அமைப்புகள் மீது இஸ்ரேல் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மேற்படி ஒன்பது நாடுகளின் முடிவு பிராந்தியமெங்கும் குறிப்பாக காசா மனிதாபிமான பணிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருப்பதாக லசரினி எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் லசரினி வெளியிட்ட அறிவிப்பில் கூறியதாவது, “நிதி உதவியை நிறுத்துவதாக அறிவித்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இந்த அமைப்பு காசாவில் முதன்மையான மனிதாபிமான நிறுவனமாகும். அதில் 20 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தங்களது உயிர்வாழ்விற்காக சார்ந்து உள்ளனர். போருக்கு மத்தியில் இதுபோன்ற முடிவுகள் ஏற்கனவே தலைவிரித்தாடும் பஞ்சத்தை அதிகரிக்கச் செய்யும். காசாவில் உள்ள பலஸ்தீனியர்களுக்கு மேலும் ஒரு கூட்டுத் தண்டனையை கொடுக்காதீர்கள்” என்றார்.

இதனை பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்திற்கு எதிரான இஸ்ரேலின் பிரசார நடவடிக்கை என்று பலஸ்தீன வெளியுறவு அமைச்சு சாடி இருப்பதோடு, சியோனிச எதிரிகளால் முன்னெடுக்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில் ஊழியர்களை பணி நீக்குவதை ஹமாஸ் அமைப்பு கண்டித்துள்ளது.

1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம், காசாவில் இயங்கும் மிகப்பெரிய ஐ.நா நிறுவனமாகும். அந்த அமைப்பு காசா, மேற்குக் கரை, ஜோர்தான், லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பலஸ்தீனர்களுக்கான சுகாதார பராமரிப்பு, கல்வி மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகளை வழங்கி வருகிறது. காசாவில் மாத்திரம் இந்த அமைப்பில் சுமார் 13,000 பேர் பணியாற்றுகின்றனர்.

காசா மீது இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்தது தொடக்கம் இந்த நிறுவனம் அந்தப் பகுதியில் உள்ள தமது நிலைகளை இடம்பெயர்ந்துள்ள ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்களுக்கு தற்காலிக முகாம்களாக பயன்படுத்தி வருகிறது.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக நீடித்து வரும் காசா மீதான இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்களால் அங்குள்ள 2.4 மில்லியன் மக்கள்தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் போல் தமது வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருப்பதோடு இஸ்ரேலின் முற்றுகையால் அங்கு உணவு, நீர், மருந்து மற்றும் எரிபொருளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்நிலையில் காசாவில் நிலவும் மழை மற்றும் குளிர்காலம் நிலைமையை மேலும் மோசமடையச் செய்திருப்பதாக ஐ.நா எச்சரித்துள்ளது.

ஹேகிலுள்ள சர்வதேச நீதிமன்றம் இனப்படுகொலை செயற்பாடுகளை தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு இஸ்ரேலுக்கு உத்தரவிட்டபோதும் காசா மீதான அதன் வான், தரை மற்றும் கடல் மார்க்கமான தாக்குதல்கள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.

நேற்று (28) அதிகாலையில் கான் யூனிஸ் மற்றும் தெற்கு காசாவின் பல பகுதிகள் அதேபோன்று காசா நகரின் மேற்கு பகுதிகளில் இஸ்ரேல் நடத்திய வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களில் பலரும் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா கூறியது.

இதில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் தாக்குதல்களில் 165 பேர் கொல்லப்பட்டு மேலும் 290 பேர் காயமடைந்ததாக காசா சுகாதார அமைச்சு கூறியது.

இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 26,422 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 65,087 பேர் காயமடைந்துள்ளனர் என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 11,000க்கும் மேற்பட்ட பலஸ்தீன சிறுவர்கள் மற்றும் 7,500க்கும் மேற்பட்ட பெண்கள் அடங்குகின்றனர்.

இதனால் மேலும் தெற்காக எகிப்து எல்லையை ஒட்டிய ரபாவை நோக்கி மக்கள் தொடர்ந்து படையெடுத்து வருகின்றனர். அந்தப் பகுதி தற்போது காசாவின் சனநெரிசல் மிக்க இடமாக மாறியுள்ளது.

அங்கு பலரும் வீதிகளின் தங்கி இருப்பதாக ஐ.நா மனித உரிமை அலுவலகத்தின் அஜித் சுங்காய் குறிப்பிட்டுள்ளார். ரபாவில் பிளாஸ்டிக் கூடாரங்களை சூழ கணுக்கால் ஆழத்திற்கு நீர் நிரம்பி இருக்கும் படங்களை ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

‘என்னால் தற்காலிக முகம் ஒன்றை, கூடாரம் ஒன்றை, எதனையும் பெற முடியவில்லை’ என்று கான் யூனிஸின் கிழக்கில் உள்ள சிறு நகர் ஒன்றில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 70 வயது உம் இமாத் என்பவர் குறிப்பிட்டார்.

‘நான் எல்லா போர்களையும் சந்தித்திருக்கிறேன்’ என்று கூறிய அந்த முதிய பெண், ‘இதனை விடவும் எந்தப் போரும் கடினமாக இருக்கவில்லை’ என்றார்.

ஹமாஸை முற்றாக ஒழிப்பதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து சூளுரைத்தபோதும் இஸ்ரேல் படை காசாவில் மூன்று மாதங்கள் கடந்து எதிர்ப்பை சந்தித்து வருவதோடு காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் எஞ்சிய பணயக்கைதிகளை விடுவிப்பது தொடர்பில் இஸ்ரேலுக்குள்ளும் நெதன்யாகு அரசுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு ஒப்பந்தம் ஒன்றுக்குச் செல்லும்படி கடந்த சனிக்கிழமை இரவிலும் நெதன்யாகுவின் தனிப்பட்ட இல்லம் மற்றும் டெல் அவிவில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

போர் நிறுத்தம் மற்றும் அமைதியை கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் முயற்சியாக அமெரிக்க உளவுப் பிரிவான சி.ஐ.ஏவின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் பாரிஸ் நகரில் இஸ்ரேல் மற்றும் எகிப்து உளவுப் பிரிவுத் தலைவர்கள், அதேபோன்று கட்டார் பிரதமரை சந்தித்து பேசி இருப்பதாக பாதுகாப்பு வட்டாரத்தை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக கடந்த நவம்பரில் ஒரு வாரம் நீடித்த போர் நிறுத்தத்தில் ஹமாஸ் பல டஜன் பணயக்கைதிகளை விடுவித்ததோடு அதற்கு பகரமாக இஸ்ரேல் சிறையில் உள்ள பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில் 100 க்கும் அதிகமான பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு பதிலாக காசாவில் இஸ்ரேல் சுமார் இரண்டு மாதங்களுக்கு போரை இடைநிறுத்துவதன் கீழ் அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தையாளர்கள் இணக்கம் ஒன்றை நெருங்கி இருப்பதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி வெளியாகி இருக்கும் இந்த செய்தியில், பேச்சுவார்த்தையாளர்கள் உடன்பாட்டு வரைவு ஒன்றை தயாரித்திருப்பதாகவும் அது தொடர்பில் பாரிஸில் பேச்சுவார்த்தை இடம்பெறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT