தலிபான்–அமெரிக்கா பேச்சு நிறைவு: அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒப்புதல் | தினகரன்


தலிபான்–அமெரிக்கா பேச்சு நிறைவு: அடுத்த கட்டத்திற்கு செல்ல ஒப்புதல்

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகளை குறைத்துக் கொள்வது தொடர்பான அண்மைய பேச்சுவார்த்தையின் சுற்றுகள் நிறைவடைந்துவிட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்தவும், அமெரிக்க படைகளை அங்கிருந்து குறைத்துக் கொள்ளவும் அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தை கட்டார் தலைநகர் டோஹாவில் நடைபெற்று வந்தது. மொத்தம் எட்டு சுற்றுகள் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு பின்னர் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லாஹ் முஜாஹித் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:

அமெரிக்கா மற்றும் தலிபான்கள் இடையிலான பேச்சுவார்த்தை கடினமானதாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது. இந்த பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு இட்டுச் செல்ல இருதரப்பிலிருந்தும் அந்தந்த தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர் என்று அந்த அறிவிப்பில் முஜாஹித் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், காபுலில் உள்ள அமெரிக்க தூதரகம் பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது தொடர்பாக எந்த அறிக்கையையும் உடனடியாக வெளியிடவில்லை.

இதனிடையே நல்லெண்ண நடவடிக்கையாக நன்னடத்தை அடிப்படையில் 35 தலிபான் கைதிகளை விடுதலை செய்வதாக ஆப்கான் அரசு திங்கட்கிழமை அறிவித்தது. போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை நிலைநாட்டும் நோக்கிலேயே ஆப்கான் அரசு இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.

நியூயோர்க் இரட்டை கோபுரத்தை அல் கொய்தா அமைப்பு கடந்த 2001 ஆம் ஆண்டு தகர்த்ததைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது.

அப்போது ஆப்கானிஸ்தானை ஆண்டு வந்த தலிபான்கள், அல் கொய்தாவுக்கு புகலிடம் அளித்து வந்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கடந்த 18 ஆண்டுகளாக அமெரிக்க ஆதரவுடன் அமைக்கப்பட்ட அரசுப் படைகள் மீதும், அமெரிக்கர்கள் மீதும் தலிபான்கள் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இந்தச் சூழலில், ஆப்கானிஸ்தானிலிருந்து தனது படைகளை முழுமையாக திரும்பப் பெற முடிவு செய்துள்ள அமெரிக்கா, அதற்கு முன்னதாக அல் கொய்தா ஆதரவை கைவிடவும் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தலிபான்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என விரும்புகிறது.

இதற்காக, டோஹா நகரில் அமெரிக்காவுக்கும், தலிபான்களுக்கும் இடையே பல கட்டங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தையே தற்போது நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Add new comment

Or log in with...