1st Test: SLvNZ; நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம் (UPDATE) | தினகரன்


1st Test: SLvNZ; நியூசிலாந்து முதலில் துடுப்பாட்டம் (UPDATE)

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அணி விபரம் வருமாறு
இலங்கை அணி:
திமுத் கருணாரத்ன, அஞ்சலோ மெத்திவ்ஸ், லஹிரு திரிமான்ன, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, நிரோஷன் திக்வெல்ல, தனஞ்சய டி சில்வா, அகில தனஞ்சய, லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால், லஹிரு குமார

நியூசிலாந்து அணி:
ஜீத் ராவல், டொம் லதம், கேன் வில்லியம்சன், ரொஸ் டெய்லர், ஹென்ரி நிகொல்ஸ், வட்லிங், மிச்சல் சன்ட்னர், ரிம் சௌதி, அஜாஸ் பட்டேல், வில் சொமர்வில், ட்ரெண்ட் போல்ட்

நியூசிலாந்துடனான இலங்கை அணியின் சவால் கொண்ட முதல் டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பம்

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

ஐ.சி.சி புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்த தொடரில் இரண்டு அணிகளும் தங்களுடைய முதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் களமிறங்கவுள்ளன. குறிப்பாக, இந்த தொடரை முழுமையாக 2–0 என வெற்றிபெறும் பட்சத்தில், வெற்றிபெறும் அணி டெஸ்ட் சம்பியன்ஷிப்பின் ஒரு தொடருக்கு வழங்கப்படும் 120 புள்ளிகளையும் மொத்தமாக பெற்றுக்கொள்ளும்.

இலங்கை அணியின் பக்கம் பார்க்கும் போது, மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் சறுக்கி வந்தாலும், டெஸ்ட் போட்டிகளில் ஓரளவு பிரகாசித்து வருகின்றது. இலங்கை அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்காக புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திமுத் கருணாரத்ன அணியை சிறப்பாக வழிநடத்தி வருகின்றார்.

இறுதியாக, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இலங்கை அணி தோல்வியுற்றிருந்தாலும், குறித்த தொடரின் முதல் போட்டியில் குசல் மெண்டிஸ் மற்றும் மெதிவ்ஸ் இலங்கை அணியை தோல்வியிலிருந்து மீட்டு, போட்டியை சமநிலைப்படுத்தியிருந்தனர்.

குறித்த தொடருக்கு பின்னர் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2–0 என இழந்திருந்தது. ஆனால், திமுத் கருணாரத்னவின் தலைமையில் முதன்முறையாக தென்னாபிரிக்கா சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இலங்கை அணி 2–0 என டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்திருந்தது. ஆசிய நாடொன்று தென்னாபிரிக்காவில் டெஸ்ட் தொடரை வென்ற பெருமையையும் இலங்கை அணி இதன்போது பெற்றிருந்தது.

குறித்த தொடரில் மிகச்சிறப்பாக பிரகாசித்திருந்த குசல் மெண்டிஸ், குசல் பெரேரா, ஓசத பெர்னாண்டோ, லசித் எம்புல்தெனிய மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான குழாத்தில் இடம்பெற்றுள்ளமை இந்த தொடரில் அணிக்கு பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேநேரம், நியூசிலாந்து அணியானது உலகக் கிண்ணத்தை மயிரிழையில் தவறவிட்ட நிலையில் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளது. மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் மட்டுமல்லாது டெஸ்ட் போட்டிகளிலும் மிகச்சிறந்த அணியாக நியூசிலாந்து வளம் வருகின்றது.

கேன் வில்லியம்சனின் தலைமைத்துவம் நியூசிலாந்து அணிக்கு அதீத பலத்தை அளித்து வருவதுடன், அவரது துடுப்பாட்டமும் எதிரணிகளுக்கு சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக, இறுதியாக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் தொடர்களிலும் தொடர்ச்சியாக வெற்றிகளை குவித்த நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசையில் 2ஆவது இடத்தில் உள்ளது.

குறித்த வெற்றிகளில் மிகச்சிறந்த வெற்றியாக சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஐக்கிய அரபு இராச்சியத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி நியூசிலாந்து அணி தொடரை வென்றிருந்தது.

அதேபோன்று, இலங்கை சூழ்நிலைக்கேற்ப நான்கு சுழல் பந்துவீச்சாளர்களை தங்களது குழாத்துக்கு இணைத்திருக்கும் நியூசிலாந்து அணி, இலங்கைக்கு மிகச்சவாலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களது சுழல் பந்துவீச்சாளர்களில் பாகிஸ்தானில் சோபித்த அஜாஷ் பட்டேல் இந்த தொடரில் முக்கிய துறுப்புச்சீட்டாக பார்க்கப்படுகிறார்.

காலி மைதான ஆடுகளமானது முதல் நாளிலிருந்து சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமையும் என்பதுடன், துடுப்பாட்ட வீரர்களுக்கும் சாதகத்தன்மையை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலையை பொருத்தவரை போட்டியில் மழைக்குறுக்கிட வாய்ப்பு இருந்தாலும், கடல் காற்றின் காரணமாக போட்டி முற்றாக தடைப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது.


Add new comment

Or log in with...