ஒன்றையொன்று முந்த முற்பட்டபோது சம்பவம்; சாரதி படுகாயம்
கொழும்பில் இருந்து புத்தளத்திற்கு குப்பைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனம் ஒன்று புத்தளம், கரிக்கட்டைப் பகுதியில் விபத்துக்குள்ளாகியது.
இன்று (14) காலை இடம்பெற்ற இவ்விபத்தில் குறித்த டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து அருவக்காடு பகுதிக்கு குப்பைகளை ஏற்றிச் சென்றுகொண்டிருந்த இரண்டு டிப்பர் வாகனங்கள் ஒன்றையொன்று முந்திச் செல்ல முற்பட்ட போதே இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் குறித்த டிப்பர் வண்டியின் முன்பக்கம் முழுமையாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
விபத்தின்போது குறித்த வாகனத்தில் சாரதி மட்டுமே பயணித்துள்ளார்.
இதேவேளை, விபத்துக்குள்ளான டிப்பர் வண்டியில் கொழும்பிலிருந்து எடுத்துவரப்பட்ட குப்பைகள், பெக்கோ இயந்திரத்தின் உதவியுடன் மற்றுமொரு டிப்பர் வண்டியில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.
இதனால், அந்த பகுதியில் சில மணிநேரம் துர்நாற்றம் வீசியமை குறிப்பிடத்தக்கது.
விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர் - ஆர். ரஸ்மின்)
Add new comment