இந்தியா - சீனா உறவு உன்னதமானது: ஜெய்சங்கர் | தினகரன்


இந்தியா - சீனா உறவு உன்னதமானது: ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். சீன துணை அதிபரை சந்தித்த அவர் 'இருதரப்பு வேறுபாடுகள் விவகாரங்களாக மாறாது' என உறுதி அளித்தார்.

சீனாவுக்கான இந்திய தூதராக 2009 முதல் 2013 வரை இருந்தவர் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர். பிரதமர் மோடி அரசில் வெளியுறவுத்துறை அமைச்சரான பிறகு முதல் முறையாக சீனா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு பல வாரங்களுக்கு முன்பே ஜெய்சங்கரின் சுற்றுப்பயணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில மாதங்களில் இந்தியா வரவுள்​ள சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் நிகழ்ச்சிகளை இறுதி செய்வதற்காக இவரின் பயணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட சில நாட்களில் கடந்த 2009ல் சீனா சென்ற பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷி, காஷ்மீர் விவகாரத்தில் சீனாவின் ஆதரவை வேண்டினார். எனினும் சீனா வெளிப்படையாக ஆதரவு எதையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக நேற்று பீஜிங் சென்ற ஜெய்சங்கர் அந்நாட்டின் துணை அதிபரும் அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு நெருக்கமானவருமான வாங் கிஷானை சந்தித்து பேசினார். அப்போது ''இந்தியா - பாகிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை சீனா கவனித்து வருகிறது. அந்தப் பகுதியின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாக்க இந்தியா ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்'' என துணை அதிபர் வாங் கேட்டுக் கொண்டார். அதை ஏற்ற ஜெய்சங்கர், ''இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான நட்பு, உலக அரசியலில் உன்னதமானது.

இந்த பகுதியின் ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு உதவுகிறது. ''இரு தரப்பு வேறுபாடுகள், இரு நாடுகளுக்கு இடையேயான விவகாரமாக மாறாது,'' என உறுதியளித்தார். பின் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யியையும் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.


Add new comment

Or log in with...