அனர்த்த விழிப்புணர்வு எந்நேரமும் அவசியம் | தினகரன்


அனர்த்த விழிப்புணர்வு எந்நேரமும் அவசியம்

இ ந்தியாவின் சில மாநிலங்களில் சுமார் ஒரு வார காலமாக சீரற்ற காலநிலை நீடித்து வருகின்றது. இதன் விளைவாக பல பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு சில கிராமங்கள் மண்சரிவில் புதையுண்டுள்ளன. அத்தோடு நூற்றுக்கணக்கானோரின் உயிர்களைக் காவு கொண்டுள்ள இந்த சீரற்ற காலநிலை இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்வையும் பாதித்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில் இலங்கையின் காலநிலையிலும் மாற்றம் ஏற்பட்டு கடந்த சில தினங்களாக சீரற்ற காலநிலை நிலவுகிறது. இதனால் பல பிரதேசங்களிலும் மழை பெய்து வருவதோடு அதன் விளைவான பாதிப்புகளுக்கும் மக்கள் முகங் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக மலையகப் பிரதேசங்களில் அதிக மழைவீழ்ச்சி கிடைக்கப் பெற்று வருவதால் மேல் கொத்மலை மற்றும் லக்ஷபான நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டு மேலதிக நீர் வெளியேற்றப்படுகின்றது. அத்தோடு விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் மேலதிக நீர் வான்கதவுகளுக்கு மேல் பாய்வதாக பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்த நீர்த்தேக்கங்களில் இருந்து வெளியேற்றப்படும் மேலதிக நீர் பாய்ந்தோடும் கீழ் மட்டப் பிரதேசங்களில் வசிக்கும் மக்களை விழிப்பாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் வேண்டுகோள் விடுத்திருக்கின்றது.

இந்த சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் சில பிரதேசங்களில் மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேபீல்ட் தோட்டப் பிரதேசத்தில் கற்பாறையொன்றும் மணல் மேடும் சரிந்து விழுந்ததில் இரண்டு பெண்கள் மண்ணில் புதையுண்டு காயங்களுக்குள்ளாகி உள்ளனர். அவர்கள் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு டிக்கோயா ஒற்றியோ தோட்டப் பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளன. அதனால் அவ்வீடுகளில் வசித்தவர்கள் பாதுகாப்பின் நிமித்தம் உறவினர்களின் இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தற்போதைய மழையுடன் சேர்த்து கடும் காற்றும் வீசுவதால் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்துள்ளன. இதனால் வீதிப் போக்குவரத்துக்கு இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன. சில பிரதேசங்களில் முறிந்து விழுந்துள்ள மரங்களின் கிளைகளால் வீடுகளுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக அக்கரப்பத்தனை பிரதேசத்தில் ஆலமரமொன்றின் கிளையொன்று முறிந்து விழுந்ததில் ஐந்து வீடுகள் சேதமடைந்திருக்கின்றன. அவ்வீடுகளில் வசித்த சுமார் 29 பேர் அருகிலுள்ள முன்பள்ளியொன்றில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொட்டகலை, கிறிஸ்லஸ் பாம் தோட்டப் பகுதியிலுள்ள ஆறொன்று பெருக்கெடுத்ததால் சுமார் 22 வீடுகளுக்குள் நீர் புகுந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். அவற்றினால் ஐந்து வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வீடுகளில் வசித்த மக்களும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த மழை நிறைந்த காலநிலையைத் தொடர்ந்து கொழும்பு, ஹற்றன், நுவரெலியா உள்ளிட்ட பிரதான வீதிகளில் மண்சரிவு ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதன் காரணத்தினால் மலையகப் பிரதேசங்களில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த முன்னெச்சரிக்கையோடும் அவதானத்தோடும் செயற்படுமாறு போக்குவரத்துப் பொலிஸார் சாரதிகளிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

தற்போதைய சீரற்ற காலநிலை அடுத்து வரும் இரண்டொரு தினங்களுக்கு நீடிக்கக் கூடிய நி​ைலமை நிலவுவதால் மலையகத்திலும் மலைசார்ந்த பிரதேசங்களிலும் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் உருண்டு விழக் கூடிய அச்சுறுத்தல் நிலவுவதாகவும் அவ்வாறான பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகுந்த விழிப்போடு இருக்க வேண்டுமென்றும் சுட்டிக்காட்டியுள்ள தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம், அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான மண்சரிவு முன்னெச்சரிக்கையையும் விடுத்திருக்கிறது.

இவ்வாறான சூழலில் மலையகம் மற்றும் மலைசார்ந்த பிரசேதங்களை உள்ளடக்கிய மத்தி மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்திருக்கிறது.

இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக எடுத்துநோக்கும் போது அடுத்துவரும் சில தினங்களுக்கு சீரற்ற காலநிலை நீடிக்குமென்பதோடு அதன் விளைவான இயற்கை அனர்த்தங்களும் பாதிப்புக்களும் குறிப்பாக மலை சார்ந்த பிரதேசங்களில் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல் நிலவவே செய்கின்றது என்பது தெளிவாகிறது. அதனால் மண்சரிவு அச்சுறுத்தல் மிக்க பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் விழிப்பாகவும் முன்னெச்சரிக்கையோடும் செயற்பட வேண்டும்.

மண்சரிவுக்கான அச்சுறுத்தல் தென்படுமாயின் அது தொடர்பில் உடனடியாக செயற்படுவதோடு, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கும் அறிவிக்கவும் தவறக் கூடாது. தம் பாதுகாப்புக்கான முன்னேற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக பாதுகாப்பான இடங்களுக்கு நகருவதே உசிதமானதாகும்.

இது விழிப்பாகவும் முன்னெச்சரிக்கையோடும் செயற்பட வேண்டிய காலமாக விளங்குகின்றது. அவ்வாறு செயற்படும் போது சீரற்ற காலநிலையினால் ஏற்படக் கூடிய இயற்கை அனர்த்தங்களையும் பாதிப்புக்களையும் பெரிதும் தவிர்த்துக் கொள்ளவும் குறைத்துக் கொள்ளவும் கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...