93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல் | தினகரன்

93 உள்ளூராட்சி சபைகளுக்கான வேட்புமனு கோரல்

சட்ட சிக்கல்கள் அற்ற 93 மாகாண சபைகளுக்குமான வேட்புமனு கோரல் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு இன்று (27) விடுக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு, இன்று (27) முதல் எதிர்வரும் டிசம்பர் 13 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை தேர்தலில் போட்டியிடுவதற்கான கட்டுப்பணம் செலுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.

மேலும் எதிர்வரும் டிசம்பர் 11 - 14 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபை எல்லை நிர்ணயம், உறுப்பினர்கள் எண்ணிக்கை தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை அடுத்து, அவ்வர்த்தமானிக்கு டிசம்பர் 04 வரை இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் புதிய தேர்தல் முறைக்கு அமைய (விகிதாசாரம், தொகுதி) இலங்கையிலுள்ள 335 உள்ளூராட்சி சபைகளில் 202 சபைகளில் தேர்தலை நடாத்துவது தடைப்பட்டுள்ளது.

ஏனைய 133 சபைகளும் குறித்த தடை உத்தரவினால் பாதிக்கப்படாத போதிலும், 40 சபைகளில் சிறு சிறு சட்ட சிக்கல்கள் காணப்படுவதால் ஏனைய 93 சபைகளில் தேர்தலை நடாத்துவதற்கான அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வர்த்தமானியிலுள்ள எழுத்து பிழைகள் காரணமாக ஏற்பட்டுள்ள சிறு சிறு சட்ட சிக்கல்கள் காணப்படும் ஏனைய 40 சபைகளும் அப்பிரச்சினை தீர்க்கப்பட்டு நாளை மறுதினம் (29) வேட்புமனு தாக்கல் அறிவிப்பு விடுக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.


Add new comment

Or log in with...